×

இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் இணையும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள்

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர்கள் வெறுங்காலுடன் வட்டம் அமைத்து இனவெறிக்கு எதிராகவும், ஆஸ்திரேலிய  பழங்குடிகளான அபாரிஜின்களை கொண்டாடவும் திட்டமிட்டுள்ளனர்.  இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு  கையை உயர்த்தும் சைகை 2016ல் அறிமுகமானது. இந்நிலையில், இந்த ஆண்டு  அமெரிக்காவில்   கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் புளாய்டு என்பவர் இனவெறி போலீஸ்காரரர்களால் கொல்லப்பட்டார். அதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.  ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டது. கொரோனா பீதிக்கு இடையில் நடந்த  இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டிகளின் தொடக்கத்தில்  இரு தரப்பு வீரர்களும் இனவெறிக்கு  எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் சீருடையில்  ‘பிளாக்  லைவ்ஸ் மேட்டர்’ என்ற வாக்கியம்   அச்சிடப்பட்டிருந்தது.

அதன் பிறகு நடந்த இங்கிலாந்து-ஆஸ்திரேலியா தொடர்களில்  இதுபோன்ற எதிர்ப்புகள் பதிவு செய்யப்படவில்லை. ஐபிஎல் தொடரில் விளையாடிய  ஜேசன் ஹோல்டர், ‘இந்த தொடரில் இனவெறிக்கு எதிராக எதிர்ப்புகளை பதிவு செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ்  தொடருக்கு பிறகும் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை’ என்று ஆதங்கப்பட்டார்.அதன்பிறகு ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அரைசதம் விளாசிய மும்பை வீரர் ஹர்திக் பாண்டியா,   முழங்காலிட்டு  பேட்டுடன்  கையை உயர்த்தி இனவெறிக்கு எதிர்ப்பை பதிவு செய்தார். அதை பார்த்து வெஸ்ட் வெண்டீஸ் வீரர் போலார்டு நெகிழ்ந்தார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீசின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங், ‘இங்கிலாந்தில் நடைபெற்ற  பாகிஸ்தான், அயர்லாந்து,  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் ஊருக்கு கிளம்பி  போய்விட்டதும், நமக்கு பொறுப்பு ஏதுமில்லை என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள். கேட்டால், வெற்று சாக்குபோக்குகளை அறிக்கைகளாக  வெளியிடுகின்றனர்’ என்று கொதித்திருந்தார்.

ஹோல்டிங் கருத்துக்கு, இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரும் அப்போது ஆதரவு  தெரிவித்தார். தொடர்ந்து  ஹோல்டர் ஆதங்கமும் சேர விஷயம் இப்போது வைரலாகி கொண்டு இருக்கிறது.இந்நிலையில்  ஆஸி. துணை கேப்டன் பேட் கம்மின்ஸ், ‘விளையாட்டுக்காக என்றில்லை, மக்களாக நாங்கள் எப்போதும்  இனவெறிக்கு  எதிரானவர்கள். அதனை பதிவு செய்வது முக்கியம் என்று நினைக்கிறோம். பயிற்சியின்போது எங்கள் அணியினருடன் கலந்து பேசினோம்.  

அதனடிப்படையில்  நவ.27ம் இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பு  இனவெறிக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவின்   அபாரிஜின்  பழங்குடிகளை சிறப்பிக்கவும்  வெறுங்காலுடன் வட்டமாக நிற்க உள்ளோம். ஆஸ்திரேலிய பெண்கள் அணியால் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட  இந்த முறை, இனிவரும் போட்டிகளிலும் தொடரும். ஏற்கனவே இதை செய்திருக்க வேண்டும். இனி இனவெறிக்கு எதிராக செய்வோம். கூடவே    ஒதுக்கப்பட்ட  பழங்குடி இனக்குழுவாக இருக்கும் அபாரிஜின்கள்தான் இந்நாட்டின் முதல் தேசிய இனம். அவர்கள் மண்ணின் மைந்தர்கள்.  முழங்காலிட்டு வெவ்வெறு வழிகளில் அவர்களுக்கு ஆதரவு காட்ட விரும்புகிறோம். அவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்தும்  முயற்சி இது’ என்று கூறினார்.

Tags : Australian ,fight , Australian team players joining the fight against racism
× RELATED ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்...