குத்தகை தொகையை செலுத்தும்பட்சத்தில் பள்ளிக்கு வைத்த சீலை அகற்ற வேண்டும்: கோயில் நிர்வாகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் 46 கிரவுண்ட் மற்றும் 1,600 சதுர அடி நிலம் உள்ளது. இந்த  நிலத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்ற, தர்மமூர்த்தி ராவ்பகதூர்  கலவல கண்ணன் செட்டி அறக்கட்டளை, அங்கு சீதா கிங்ஸ்டன் மெட்ரிக்  மேல்நிலை பள்ளியை நிறுவியது.இங்கு 12ம் வகுப்பு வரை சுமார் 1000  மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆசிரியர் உள்பட 75 பேர் பணியாற்றுகின்றனர். கோயிலுக்கு அறக்கட்டளை  நிர்வாகம், குத்தகை தொகையை செலுத்தாததால், கடந்த  ஜூலை 23ம் தேதி அறநிலைய துறையினர் பள்ளி வளாகத்துக்கு சீல் வைத்தனர்.

 இதனால் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என கூறி, மாணவர்களின் பெற்றோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பள்ளி வளாகத்துக்கு மாத வாடகையாக 20 லட்சம் நிர்ணயித்து 2021  ஜூலை வரை செலுத்த அறிவுறுத்தினார்.

நவம்பர் மாத தொகை செலுத்தியவுடன் பள்ளிக்கு வைத்த சீலை அகற்ற வேண்டும் என காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் நிர்வாகத்துக்கு  உத்தரவிட்டார்.

மேலும், வாடகை விவகாரத்தில் கோயில் நிர்வாகம் மற்றும் அறக்கட்டளை இடையே சுமுக உடன்பாடு ஏற்பட முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால்  அடுத்த கல்வி ஆண்டுக்கு வேறு பள்ளியை நாடும்படி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2021 மார்ச் மாதத்துக்குள் தெரியப்படுத்த  வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: