தீபாவளி மது விருந்தில் தகராறு 2 பேர் அடித்து கொலை: நண்பர்கள் கைது

பெரம்பூர்: கொளத்தூர் மற்றும் பல்லாவரம் பகுதியில் தீபாவளி மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்கள் அடித்து கொல்லப்பட்டனர்.  இதுதொடர்பாக, அவர்களது நண்பர்களை போலீசார் கைது செய்தனர். கொளத்தூர் மக்காரம் தோட்டம் அருகில் உள்ள கருமாரி அம்மன் கோயில் எதிரில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் காலை  ராஜமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், இறந்து கிடந்தவர் சென்னை பொன்னியம்மன்மேடு, பிரகாஷ் நகர், 5வது தெருவை சேர்ந்த பாலாஜி (23), தனியார் நிறுவன ஊழியர்  என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், கடந்த 14ம் தேதி நள்ளிரவு இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது,  இவருக்கும் நண்பர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியுள்ளனர். இதில், படுகாயமடைந்த பாலாஜி  சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது நண்பர்களான கார்த்திக் (24), ராஜ்குமார் (26), முருகேசன் (18), ஜார்ஜ் புஷ் (26) ஆகிய 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு  செய்து, நேற்று காலை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருகின்றனர். மது போதை தகராறில் வாலிபரை அவரது நண்பர்களே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியது.

மற்றொரு சம்பவம்:  சென்னை மின்ட் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (45), கோபி (45). நண்பர்களான இவரகள் கூலித்தொழில் செய்து வந்தனர்.  தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் அனகாபுத்தூர் அருள்  நகரை சேர்ந்த வாசுதேவன் (60), மது அருந்த  இவர்களை அழைத்துள்ளார்.

அதன்பேரில், இருவரும் வாசுதேவன் வீட்டிற்கு வந்து, 2 நாட்களாக அங்கேயே தங்கி, மது அருந்தி உள்ளனர். நேற்று முன்தினம் இதை பார்த்த  வாசுதேவனின் மகன் நவீன் (27), தந்தை மற்றும் அவரது நண்பர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபி, ‘‘உன்னால் தான் நான் இங்கு மது அருந்த வந்து அவமானப்படுகிறேன்,’’ என்று மணிகண்டனிடம் கூறியுள்ளார்.  இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோபி, அருகில் கிடந்த  பீர் பாட்டிலை எடுத்து மணிகண்டன் தலையில் பலமாக தாக்கினார். இதில்  படுகாயமடைந்த மணிகண்டன்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார் , மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு  மருத்துவமனைக்கு  அனுப்பினர். மேலும் வழக்குப் பதிந்து கோபியை கைது  செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>