குற்ற வழக்குகளை முறையாக விசாரிக்காத 304 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: ஐகோர்ட் கிளையில் டிஜிபி தகவல்

மதுரை: குற்ற வழக்குகளில் முறையான விசாரணை மேற்கொள்ளாத 304 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்ைக எடுத்துள்ளதாக டிஜிபி  ஐகோர்ட் கிளையில் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்பாசேத்தியைச் சேர்ந்தவர் பாலமுருகன். ஒரு கொலை வழக்கில் சிவகங்கை நீதிமன்றம், இவருக்கு 5 ஆண்டு  சிறைத்தண்டனை விதித்தது. இதை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி  பி.புகழேந்தி, கவனக்குறைவாகவும், விருப்பம் ேபாலவும் விசாரணை அதிகாரி செயல்பட்டுள்ளார். இதனால் மனுதாரர் விடுவிக்கப்படுகிறார்.

காவல்  துறையில் விசாரணையின் தரம் குறைந்துள்ளதால், குற்றவாளிகள் விடுதலையாவது அதிகரித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்   விடுதலையாகும்போது, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? இந்த வழக்கில் முறையற்ற விசாரணையால்  பாதிக்கப்பட்டோருக்கு, ஏன் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கக்கூடாது என்பது குறித்து டிஜிபி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. டிஜிபி தரப்பில் உதவி ஐஜி திருநாவுக்கரசு தாக்கல் செய்த பதில்  மனுவில், ‘‘போலீஸ் நிலையாணை மற்றும் சுற்றறிக்கைகள்படி முறையான விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2016 முதல்  2020 வரை குற்ற வழக்குகளில் முறையான விசாரணை மேற்கொள்ளாத போலீஸ் அதிகாரிகள் 304 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  காவல் நிலையங்களில் பதிவாகும் வழக்கு தொடர்பான தினசரி அறிக்கைகள், அந்தந்த மாவட்ட எஸ்பிகள் மூலம் டிஐஜி மற்றும் ஐஜி ஆகியோரால்  மாதந்தோறும் ஆய்வு செய்யப்படுகிறது. போலீஸ் அகாடமி மூலம் அறிவியல்பூர்வ விசாரணை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது’’ என  கூறப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்டவருக்கு ரூ.3லட்சம் அதிகாரியிடம் வசூலிக்க உத்தரவு

 நீதிபதி புகழேந்தி அளித்த உத்தரவில், ‘‘சட்டப்படியான உரிமைகளுடன், பாதுகாப்புடன் ஒவ்வொரு குடிமகனும் வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டும்.  பாகுபாடின்றி சட்டம் கண்டிப்புடன் அமலாக வேண்டும். முறையாக விசாரிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை அவசியம். ஏனெனில்,  விசாரணையை மாற்றக்கோரியும், போலீசாரிடம் இருந்து இழப்பீடு கோரியும் நாள்தோறும் ஏராளமான மனுக்கள் தாக்கலாகின்றன. முறையான  விசாரணை இல்லாததால் தான் சாட்சிகள் பிறழ் சாட்சியாகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டோர் தப்பிப்பதற்கு இந்த வழக்கே சாட்சி. 10 ஆண்டுக்கும் மேல் வீணாகியுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணான  கொலையானவரின் குடும்பத்தைச் சேர்ந்த அன்னலட்சுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடாக பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும்.  இந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் வசூலிக்கலாம். லஞ்சம், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தையே அனைவரும்  விரும்புகின்றனர். இதற்கான நீதிபதி ராஜன் குழு பரிந்துரையை கண்டிப்பாக பின்பற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>