×

தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதல்வரானார் நிதிஷ் குமார்: 14 அமைச்சர்கள் பொறுப்பேற்பு

பாட்னா: பீகார் மாநில முதல்வராக, தொடர்ந்து 4வது முறையாக நிதிஷ் குமார் நேற்று பதவியேற்று கொண்டார். அவருடன் 14 அமைச்சர்களும்  பதவியேற்று கொண்டனர். பாட்னாவில் உள்ள ஆளுனர் மாளிகையில் நடந்த விழாவில் ஆளுனர் பாகு சவுகான் இவர்களுக்கு பதவிப் பிரமாணமும்,  உறுதிமொழியும் செய்து வைத்தார். நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றது. இதில்  பாஜ 74 தொகுதிகளை கைப்பற்றி மாநில அளவில் 2வது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளை மட்டுமே  கைப்பற்றிய நிலையில், நிதிஷ் அடுத்த முதல்வர் ஆவாரா? என்ற கேள்வி எழும்பியது. ஆனால் நேற்று முன்தினம் நடந்த கூட்டணி கட்சிகளின்  எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில்  நிதிஷ் குமார் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள ஆளுனர் மாளிகையில் நேற்று மாலை 4.30 மணிக்கு பதவியேற்பு விழா நடந்தது. இதில், தொடர்ந்து 4வது  முறையாக நிதிஷ் குமார் பதவியேற்று கொண்டார். அவருக்கு ஆளுனர் பாகு சவுகான் உறுதிமொழியும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, துணை முதல்வர்களாக பொறுப்பேற்க இருக்கும் பாஜ.வை சேர்ந்த தர்கிஷோர், ரேணு தேவி அமைச்சர்களாக பதவியேற்று  கொண்டனர். அவர்கள் துணை முதல்வர்களாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். இவர்களுடன் சேர்த்து பாஜ.வை சேர்ந்த 7 பேர் அமைச்சர்களாக  பதவியேற்றனர். இவர்களுடன் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 5 பேரும், கூட்டணி கட்சிகளான இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா, விகாஷீல் இன்சார்  கட்சியை சேர்ந்த தலா ஒருவர் உள்பட மொத்தம் 14 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்றபின் நிதிஷ் அளித்த பேட்டியில், ‘‘மக்கள் தீர்ப்பின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஒருமுறை ஆட்சி அமைத்துள்ளது. நாங்கள்  இணைந்து மக்களுக்காக சேவை செய்வோம்’’ என்றார். கடந்த முறை துணை முதல்வராக இருந்த பாஜவின் சுஷில் குமார் மோடிக்கு  வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மெகா கூட்டணி புறக்கணிப்பு
தேஜஸ்வி தலைமையிலான மெகா கூட்டணி, `மக்கள் இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராகவே தீர்ப்பளித்தனர். ஆனால் இந்த  தீர்ப்பு முறைகேடுகளின் மூலம் மாற்றப்பட்டது,’ என குற்றம் சாட்டி உள்ளன. இதனால் அந்த கூட்டணி கட்சிகள் நேற்று நடந்த நிதிஷ் குமார்  பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தன. இது தொடர்பாக ஆர்ஜேடி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில், ``கைப்பாவை அரசின்  பதவியேற்பு விழாவை ஆர்ஜேடி புறக்கணிக்கிறது. மக்கள் மாற்றத்தை எதிர் நோக்கி ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை.  மக்களின் தீர்ப்பு ஆளுங்கட்சியின் உத்தரவினால் மாற்றப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

அமித் ஷா, நட்டா பங்கேற்பு
பீகார் ஆளுனர் பாகு சவுகான் தலைமையில் ராஜ்பவனில் நடந்த நிதிஷ் குமார் பதவியேற்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ  தேசியத் தலைவர் ஜேபி. நட்டா, பாஜ தேசிய பொது செயலாளர் (அமைப்பு) பிஎல். சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், விகாஷீல் இன்சான்  கட்சியின் தலைவர் முகேஷ் ஷானி கலந்துகொண்டார்.

பிரதமர் வாழ்த்து
பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட தனது டிவிட்டரில், `பீகார் முதல்வராக பதவியேற்று கொண்ட நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்கள். பீகார் அரசின்  அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். பீகாரின் வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயக கூட்டணி  குடும்பம் ஒருங்கிணைந்து பாடுபடும். மத்திய அரசிடம் இருந்து பீகாரின் நலத்திட்டங்களுக்கு தேவையான உதவிகளை முடிந்தளவு பெற்று தரும் என  உறுதி அளிக்கிறேன்,’’ என்று கூறியுள்ளார்



Tags : Nitish Kumar ,Chief Minister ,ministers ,Bihar , For the 4th time in a row Bihar Chief Minister Nitish Kumar: 14 ministers in charge
× RELATED பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி...