திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பின் இறந்த பெண்ணை மேல்சிகிச்சைக்கு அனுப்பிய டாக்டர்: சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் முற்றுகை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பின் இறந்த பெண்ணை 4 மணிநேரம் கழித்து டாக்டர், மேல்சிகிச்சைக்கு  அனுப்பியதை கண்டித்து உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம்  மாடப்பள்ளி  களளூர் பகுதியை சேர்ந்தவர்  ஜீவா. இவரது மனைவி நந்தினி(24), தனியார் மருத்துவமனையில் நர்சாக  பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. நிறைமாத கர்ப்பிணியான நந்தினிக்கு கடந்த சனிக்கிழமை மாலை பிரசவ வலி  ஏற்பட்டது. இதையடுத்து, அவரை கதிரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். நர்ஸ்கள் பரிசோதித்து மறுநாள் காலை  திருப்பத்தூர் அரசு  மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பணியில் இருந்த அரசு டாக்டர், ‘நந்தினிக்கு சுக பிரசவம் நடக்காது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்’  என்று கூறியுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு நந்தினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில், அவருக்கு அழகான  பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தாயும் சேயும் நல்ல நிலையில் இருந்தனர்.

இந்நிலையில், திடீரென நந்தினிக்கு ரத்தம் குறைவாக உள்ளது. ஒரு யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. இங்கு ரத்தம் இல்லை. எனவே வெளியில்  இருந்து வரவழைக்கும்படி ஜீவாவிடம் தெரிவித்துள்ளனர். அதன்படி, தனக்கு தெரிந்தவர்களை ரத்தம் கொடுக்க அழைத்து வர ஜீவா சென்றார். பின்னர் மருத்துவமனைக்கு வந்தபோது, அவருடைய மாமியார்  அலறி அடித்துக் கொண்டு நர்ஸ்களிடம் நந்தினிக்கு பேச்சு மூச்சு இல்லை என  கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த ஜீவா சென்று பார்த்தபோது அவர் பேச்சு மூச்சில்லாமல் கிடந்துள்ளார். இதற்கிடையே அங்கு வந்த டாக்டர்கள்  உடனடியாக மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பினர்.

அங்கு நந்தினியை பரிசோதித்த டாக்டர்கள், ‘உனது மனைவி இறந்து 4 மணி நேரம் ஆகிறது. இங்கே எதற்கு எடுத்து வந்தீர்கள்’ என்று ஜீவாவிடம்  கேட்டுள்ளனர். இதனால் வேதனையடைந்த ஜீவா, நந்தினியின் சடலத்தை வாங்க மறுத்து அங்கேயே விட்டுவிட்டு, நேற்று காலை தனது  உறவினர்களுடன் சென்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  தகவலறிந்த திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேல் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அனைவரும்  கலைந்து சென்றனர்.

Related Stories:

>