×

ராசிபுரம் அரசு கல்லூரியில் ஆல்பாஸ் மாணவர்களுக்கு முதுகலை ‘சீட்’ மறுப்பு

ராசிபுரம்: ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரியில், ஆல்பாஸ் திட்டத்தில் இளங்கலை முடித்த மாணவர்களுக்கு, முதுகலை பட்டம் படிக்க கல்லூரி  நிர்வாகம் சீட் வழங்க மறுத்து விட்டது. கொரோனா ஊரடங்கின் காரணமாக, 2019-2020க்கான செமஸ்டர் தேர்வுகளை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ரத்து செய்து உத்தரவிட்டது. தமிழக  அரசு செமஸ்டர் தேர்வுக்கு பணம் கட்டிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. ஆனால், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு  வழங்கியது போல், கல்லூரி மாணவர்களுக்கு மதிப்பெண் ஏதும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடப்பு  ஆண்டு முதுகலை பட்ட வகுப்பு சேர்க்கை நடந்தது. ஆனால், முதுகலை படிப்பில் சேர மதிப்பெண்கள் கட்டாயம் என, சில பல்கலைக்கழகங்கள்  மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகள் அறிவித்தது. இதனால் தமிழகம் முழுவதும், அரசின் ஆல்பாஸ் திட்டத்தில் பாசான லட்சக்கணக்கான  மாணவர்கள், முதுகலை பாடப்பிரிவில் சேர முடியவில்லை.

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில், இளங்கலையில் அரியர்ஸ் வைத்து, ஆல்பாஸ் திட்டத்தில் பாசான மாணவர்கள் நேற்று சேர்க்கைக்காக சென்ற போது, அவர்களுக்கு சீட்  இல்லை என திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். குறைந்த அளவிலான மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என அரசு  அறிவித்தாலும், சிலர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். இதில் நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தமிழக அரசின் இறுதி முடிவிலேயே, மாணவர் சேர்க்கை  நடைபெறும். ஆனால், அரசு கல்லூரியில் முதுகலை படிப்பில் சேருவதற்காக சென்றால், மதிப்பெண் இல்லை என்ற காரணத்தைக் காட்டி,  கல்லூரிகளில் சேர்க்க மறுக்கிறார்கள்.

தவிர, நேற்றுடன் இந்த கல்லூரிகளில் சேர்க்கையும் முடிந்துவிட்டது. இதனால் ஓராண்டு காலம் வீணாகி  விட்டது என மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.இது குறித்து கல்லூரி நிர்வாகம் கூறுகையில், ‘ஒரு பாடப்பிரிவில் குறைந்த அளவு மாணவர் சேர்க்கை இருக்கும் போது, அதிக மாணவர்கள் போட்டி  போட்டால், மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும். தற்போது மதிப்பெண் இல்லாத நிலையில் சீட் வேண்டும் என மாணவர்கள் கேட்பது  தவறு. இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதால்,  இறுதி தீர்ப்பின் அடிப்படையிலேயே சேர்க்கையை நடத்த முடியும்,’ என்றனர்.



Tags : Masters ,Rasipuram Government College , Rasipuram Government College For Alpas students Postgraduate ‘seat’ denial
× RELATED சில்லி பாயின்ட்…