×

உலக மொழிகளுக்கெல்லாம் உயர் மொழியாய் திகழ்வது தமிழ்: துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேச்சு

சென்னை: பிரான்சு ஒரேயால் தமிழ் கலாச்சார மன்றம் மற்றும் உலக தமிழ் சங்கம் மதுரை இணைந்து வழங்கிய `முத்தமிழ் விழா - 2020’’ல்  இணையவழி நேரலையில் நேற்று முன்தினம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பேசியதாவது: தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமே அல்ல. அதுதான் நமது வாழ்வின் வழி. தமிழ் மொழி என்பது சொற்களும் அதன் பொருளும் இணைந்த கூட்டுத்  தொகுப்பு அல்ல. அதுதான் நம்முடைய அடையாளம். உலக மொழிகளுக்கெல்லாம் உயர் மொழியாய் திகழ்வது, நமது அன்னை தமிழ்மொழியே ஆகும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2005ம் ஆண்டில் பிரான்ஸ் ஒரேயால் தமிழ் கலாச்சார மன்றத்தை தொடங்கி வைத்து, அதனை இன்றளவும்  சிறப்புடன் செயல்படுத்தி வரும், அதன் தலைவர் இலங்கை வேந்தன், செயலாளர் கிருஷ்ணராஜ் ஆகியோரை பாராட்டுகிறேன்.

இம்மன்றம் வாராந்திர  தமிழ்மொழி வகுப்புகள் பண்பாட்டை காக்கும் இசைப்பயிற்சி, நடன பயிற்சி வகுப்புகள், செந்தமிழின் சிறப்பு மேம்பட பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள்  நடத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதுடன், தமிழர்களின் தனி பெருமையை எடுத்துக் காட்டும் வகையில் இந்த பகுதியில் வாழும் 500  குடும்பங்களுக்கு மேல் ஓரிடத்தில் ஒன்றுகூடி பொங்கல் திருநாள் மற்றும் தைப்பூச திருவிழாவினை நடத்துவது குறித்தும் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி  அடைகின்றோம். 2011ம் ஆண்டில் அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலையை பிரான்ஸ் ஒரேயால் நகரில் அமைத்த இம்மன்றம். தற்போது  திருவள்ளுவருக்கு சிலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதை அறிந்து பெருமிதம் அடைகின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.



Tags : O.P.S. , For all world languages High language திகழ்வது தமிழ்: Deputy Chief Minister O.P.S. Speech
× RELATED பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்த ஓ.பி.எஸ்