×

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 தொகுதியில் 39.40 லட்சம் வாக்காளர்கள்: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை:  சென்னை மாநகராட்சியில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்,  அரசியல் கட்சி பிரநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். இதன்படி மொத்தம் வாக்காளர் எண்ணிக்கை 39.40 லட்சம் ஆகும்.சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல்  அலுவலருமான பிரகாஷ் அரசியல் கட்சி பிரநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். இதில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மேகநாத  ரெட்டி, சென்னை மாநகராட்சி தேர்தல் பிரிவின் மாவட்ட வருவாய் அலுவலர் பெர்மி வித்யா, மாவட்ட வருவாய் அலுவலர் குலாம் ஜிலானி பாபா,  திமுக மாவட்ட செயலாளர்கள் சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, அதிமுக மாவட்ட செயலாளர்  பாலகங்கா, காங்கிரஸ் வழக்கறிஞர் அணி மாநில தலைவர் எஸ்.கே.நவாஸ், சிபிஐ மாவட்ட செயலாளர் ஏமுமலை, தேமுதிக மாவட்ட செயலாளர்  விசாகன் ராஜா உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:சென்னை மாநகராட்சி பகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 39 லட்சத்து 46 ஆயிரத்து 792. இதைத் தொடர்ந்து நடைபெற்ற சுருக்க  திருத்தத்தின்படி, இதில் 10,989 ஆண்கள், 9,167 பெண்கள், 8 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 20,161 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு  உள்ளது.தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் படி சென்னையில் 19,39,694 ஆண்கள், 19,99,995 பெண்கள், 1,015 இதர வாக்காளர்கள்  என்று மொத்தம் 39,40,704 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 481  வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 189 வாக்காளர்களும் உள்ளனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியல்  மண்டல அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடியில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள டிசம்பர் 22ம்  தேதி வரை மண்டல அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். இதுதவிர, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நவம்பர் 21  மற்றும் 22, டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதிலும் பொதுமக்கள் பல்வேறு திருத்தங்களை  மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.இந்த கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ பேசுகையில், ஆன்லைனில் இருந்து விண்ணப்பப்படிவங்களை பதிவேற்றம்  செய்யும் போது அதில் படிவங்களுக்கான எண் இருப்பதில்லை என்றார்.

இதற்கு பதிலளித்த ஆணையர், மண்டல அலுவலகங்களில் படிவங்களை  பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று தெரிவித்தார். திமுக மாவட்ட செயலாளர் சேகர்பாபு பேசுகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்  அன்று வாக்குசாவடி அலுவலர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டி உள்ளது. எனவே, வார்டு வாரியாக வாக்குச்சாவடி அலுவலர்களின்  தொடர்பு  எண்ணை அளிக்க வேண்டும் என்றார்.மாதவரம் சுதர்சனம் பேசுகையில், வாக்காளர் பதிவு அதிகாரிகள் உரிய நேரத்தில் வருவதில்லை. எனவே, அவர்களை காலை 10 மணிக்கே முகாம்  நடத்தும் இடத்திற்கு வர அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Tags : voters ,Prakash ,constituencies ,Chennai Corporation , Subject to the Corporation of Chennai 39.40 lakh voters in 16 constituencies: Interview with Commissioner Prakash on release of draft voter list
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில்...