சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: சீலிடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கண்டிப்பாக ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என நேற்று நடந்த விசாரணையின்  போது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து  2018 மே  28ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது உச்ச நீதிமன்றத்தின்  நீதிபதிகள் நவீன் சின்கா மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோர் அமர்வு முன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது  வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் முகுல் ரோத்தகி ஆகியோர் தங்கள்  வாதத்தில்,”தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென தமிழக அரசால் மூடப்பட்டதால் உள்ளே இருக்கும் விலை உயர்ந்த  இயந்திரங்கள் அனைத்தும் வீணாகும். இதனால் பெருமளவு பொருளாதார நஷ்டம் ஏற்படும். அதனால் பராமரிப்பு பணிக்கு மட்டும் இடைக்காலமாக  அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

   இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் வழக்கறிஞர் யோகேஷ்  கண்ணா ஆகியோர் வாதத்தில்,” தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் கண்டிப்பாக அனுமதி வழங்க முடியாது. இதில் பாதிப்பு  என்பது நூறு சதவீதம் உறுதியான பட்சத்தில் ஆலைக்கு சீல் வைத்து இழுத்து மூடப்பட்டது. ஆலையால் மக்களுக்கு பிரச்னை ஏற்படாதவாறு அரசு  மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரப்பில் பராமரிப்பு மற்றும் தொடர் கண்காணிப்பு நடத்தப்படுகிறது. அதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எந்த  நிவாரணமும் வழங்கக் கூடாது. மேலும் இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டனர்.  அப்போது குறுக்கிட்ட ஆலை தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதிகள் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தனர். அதில்,‘‘ஆலை மூடப்பட்டது தொடர்பாக  எங்களது தரப்பு பதிலை மனுவாக தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதையடுத்து உத்தரவில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை முடிய விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய ஆலை நிர்வாகத்திற்கு அவகாசம்  வழங்கப்படுகிறது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து நேற்று உத்தரவிட்டனர். இதில் தமிழக மாசுக்  கட்டுப்பாட்டு வாரியத்தின் தரப்பில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு எதிராக 3 ஆயிரம் பக்கம் ஆதாரம் கொண்ட ஆவணங்கள் கடந்த 6ம், தேதி  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories:

>