×

காட்டாங்கொளத்தூர் ஏரியில் உபரிநீர் திறப்பால் மூழ்கிய நகர் பகுதிகள்

* வெள்ளத்தில் நீந்தும் வாகனங்கள் * மொட்டை மாடியில் ஏராளமானோர் தஞ்சம்

சென்னை: மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் ஏரி நேற்று காலை திறந்துவிடப்பட்டது. இதனால் அதன் உபரிநீர் அருகில் உள்ள  நகர் பகுதிகளில் வெள்ளமாக சூழ்ந்துள்ளது. சாலைகளில் மழைநீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பரபரப்பு  நிலவியது.  மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் ஏரி நிரம்பி, அதன் உபரிநீர் நேற்று காலை திறந்துவிடப்பட்டது. இதனால் தண்ணீர்  செந்தமிழ் நகர் மற்றும் காவனூர் வழியாக பொத்தேரிக்கு செல்வதால் அப்பகுதியில் குடியிருப்பு மற்றும் சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி  நிற்கிறது. அங்குள்ள ஒரு சில வீடுகளிலும் மழைநீர் புகுந்து கட்டில், பீரோ முதலான உடமைகளும் அடித்து செல்லப்பட்டன. தரைத்தளத்தில் தண்ணீர்  புகுந்ததால், குடியிருப்பு வாசிகள் அனைவரும் தங்களது உயிரைக் காப்பாற்றிகொள்ள மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர். அப்பகுதி முழுவதும்  வெள்ளக்காடாக கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்சியளிக்கிறது.

 மேலும் மறைமலை நகர் நகராட்சிக்குட்பட்ட கோனாதி, பொத்தேரி கிழக்கு பொத்தேரி, திருக்கச்சூர், பேரமனூர், நின்னகரை ஆகிய குடியிருப்பு  பகுதிகளில் வெள்ள நீர் கடல்போல் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள்  வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், செந்தமிழ் நகர் பகுதி சாலையின் குறுக்கே உபரிநீர் வெள்ளம்போல் சென்று வருவதால், அங்கு வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.  செங்கல்பட்டு மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், செங்கல்பட்டு அருகே திம்மாவரம், மகாலட்சுமி நகரில்உள்ள நீஞ்சல்மடு அணை  முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால், நீஞ்சல்மடு அணையின் கரைகள் உடைந்து மகாலட்சுமி நகர் மூழ்கும் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறது.எனவே,  நீஞ்சல்மடு அணையில் இருந்து உபரிநீரை, உடனடியாக திறந்துவிடவேண்டுமென பொதுப்பணி துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்தனர்.

இதனையடுத்து,  நீஞ்சல்மடு அணை திறக்கப்பட்டு உபரி நீர் பாலாற்றில் சென்று சேருகிறது. செங்கல்பட்டு நகரைச்சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை  பெய்து வருவதால், ஜேசிக நகர், ராமகிருஷ்ணா நகர், பவானி நகர், அண்ணா நகர் ஆகிய குடியிருப்புகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் மழைநீரை வெளியேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க  வேண்டுமென அப்பகுதியினர் கோருகின்றனர்.மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையினால் மாவட்டத்தின் பெரிய ஏரியான  மதுராந்தகம் ஏரி, கொளவாய் ஏரி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஏரி, மண்ணிவாக்கம் ஏரி, தாம்பரம் இரும்புலியூர் ஏரி, மேடவாக்கம் ஏரி,பொன்விளைந்த  களத்தூர் ஏரி, கொண்டங்கி ஏரி, மானாம்பதி ஏரி உள்ளிட்ட பல்வேறு பெரிய ஏரிகள் வேகமாகநிரம்பி வருகின்றன.  பொதுப்பணிதுறைக்கு சொந்தமான  சிறிய ஏரிகளும், கனமழை காரணமாக நிரம்பி வருகின்றன.இந்த ஏரிக்கு வரும் வரத்து கால்வாய்களை பொதுப்பணி துறையினர் சீரமைக்க வேண்டும். அதன் கரை மற்றும் மதகு பகுதிகளையும் சீரமைக்க  வேண்டும் என ஏரி நீரை பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

ஏரிகள் நிரம்பின
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 528 ஏரிகள் உள்ளன. இதில், புதுப்பட்டினம், செம்பாக்கம், நன்மங்கலம், தாம்பரம் பெரிய  ஏரி, எம்.என் குப்பம், கோரப்பட்டு, வெண்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, கடப்பேரி, மருதேரி, சின்ன செங்காடு ஏரி உள்ளிட்ட 31 ஏரிகள் முழுவதும்  நிரம்பி உள்ளன. 307 ஏரிகள் 75%மும், 190 ஏரிகள் 50 சதவீதம் நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : areas ,Kattagollathoor Lake , At Kattagollathoor Lake Urban areas submerged by floodwaters
× RELATED திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு