×

தொடர் மழை எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்புகிறது

சென்னை:  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின்  நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 20 அடியை தாண்டிய நிலையில், எந்த நேரத்திலும் நிரம்பும் என்பதால் அதிகாரிகள் தீவிரமாக  கண்காணிக்கின்றனர்.தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம்  இரவு முதல் பலத்த மழைபெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை வரை சராசரியாக 45.14 மில்லி மீட்டர் மழை பதிவாகி  உள்ளது.  தொடர் மழை காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்மட்டம்  வேகமாக உயர்ந்து வருகிறது.சென்னைக்கு குடிநீர் வழங்கும்  நான்கு முக்கிய  ஏரிகளின் நீர்மட்டம் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வருமாறு: பூண்டி ஏரியின் உயரம் 35 அடி.

மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி. தற்போது 1426 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.  விநாடிக்கு தண்ணீர் வரத்து 424 கன அடியாக உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 14 கன அடி வீதம் அனுப்பப்பட்டு  வருகிறது.செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம்  24 அடி. மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. தற்போதைய நிலவரப்படி 2832 மில்லியன் கன  அடி தண்ணீர் உள்ளது. விநாடிக்கு தண்ணீர் வரத்து 861 கன அடியாக  உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 13 கன அடி  வீதம் திறக்கப்படுகிறது.புழல் ஏரியின் உயரம் 21.20 அடி. மொத்த கொள்ளளவு 3330 மில்லியன் கனஅடி. ஏரியில் தற்போது 2382 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.  ஏரிக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 516 கன அடி. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.சோழவரம் ஏரியின் உயரம் 18.86 அடி. மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி. தற்போது 149 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.  ஏரிக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 194 கன அடி.

இதையடுத்து ஏரிகளின் நீர்மட்டத்தை  பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா ஆய்வு மேற்கொண்டார். ஆந்திர மாநிலம் கண்டலேறு  அணையில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் தொடர் மழை காரணமாக வரும் தண்ணீர் ஆகியவை சேர்த்து இணைப்பு கால்வாய் வழியாக தற்போது  பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 424 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. பூண்டி ஏரியில் மொத்தம் உள்ள 35 அடி நீர்மட்டத்தில் தற்போது 28.55 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது  20.91 அடி நீர்மட்டம் உள்ளது. அந்த நீர்மட்டம் 22 அடியாக உயரும்போது மாவட்ட ஆட்சியர் மூலமாக பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  விடப்படும்.
இந்த 4 ஏரிகளின் நீர்மட்டம் 7 டிஎம்சி என்ற நீர் இருப்பை நெருங்கி கொண்டிருக்கிறது. எனவே அடுத்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட வாய்ப்பிருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த 2015ல் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நள்ளிரவில் உபரிநீர் திறந்துவிடப்பட்ட சம்பவம் மீண்டும் நடைபெற கூடாது என  மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



Tags : Sembarambakkam Lake , Echo of continuous rain Sembarambakkam Lake is filling up fast
× RELATED தலை, உடலை துண்டு துண்டாக வெட்டி...