×

அண்ணா பல்கலை. துணைவேந்தர் மீதான ஊழல் புகார் நீதிபதி பி.கலையரசன் பொறுப்பேற்பு

* ஆவணங்கள் ஒப்படைப்பு * விசாரணை விரைவில் துவங்குகிறது

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி  பி.கலையரசன் நேற்று பொறுப்பேற்றார். அண்ணா பல்கலைக்கழகத்தை 2ஆக பிரித்து, அதில் ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் என்றும் மற்றொன்றை உயர் சிறப்பு அந்தஸ்து கல்வி  மையமாகவும் அமைக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி  வைக்கப்பட்டது.  அந்த மசோதாவுக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தரலாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா, மத்திய மனித  வளத் துறைக்கு தமிழக அரசின் கருத்தை கேட்காமல் கடிதம் ஒன்றை தன்னிச்சையாக எழுதினார்.

இதற்கு பல்வேறு கல்வியாளர்கள் தரப்பிலும், அரசியல் கட்சிகள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, ` அண்ணா  பல்கலைக்கழகத்திற்கு அந்த சிறப்பு அந்தஸ்தே தேவையில்லை’ என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளிப்படையாக  தெரிவித்தார்.அதுமட்டுமல்லாமல் பொறியியல் கல்லூரிகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட விஷயத்தில்  தமிழக அரசுக்கும் துணைவேந்தர் சூரப்பாவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.
மேலும், பல்கலைக்கழகத்தில் தனது மகளுக்கு பணி வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அண்ணா பல்கலைக்கழகத்தின் நிதியில் சுமார் 200  கோடிவரை முறைகேடு நடந்துள்ளதாகவும், ஆசிரியர் பணியிடங்கள் நியமனத்தில் ₹13 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை ஒவ்வொருவரிடமும்  வாங்கியதில் சுமார் 80 கோடிவரை முறைகேடு நடந்துள்ளது. இதில் துணைவேந்தருக்கும் தொடர்பு உள்ளதாக புகார்கள் வந்தன.   இந்த  குற்றச்சாட்டுகள் அனைத்தும் தமிழக அரசுக்கு புகார் மனுவாக வந்துள்ளது. பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் இல்லாமல் பணி நியமனம்  வழங்கியதாகவும் சூரப்பா மீது புகார் வந்துள்ளது.

நாட்டிலேயே புகழ் பெற்ற பழமையான பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீது எழுந்துள்ள இந்த கடுமையான  குற்றச்சாட்டுகள் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.இந்த குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, துணைவேந்தர் சூரப்பா,  அண்ணா பல்கலைக்கழக துணை இயக்குனர் சக்திநாதன் ஆகியோர் மீதான புகார் மீது விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி  பி.கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து, நீதிபதி கலையரசன் நேற்று விசாரணை அதிகாரியாக பதவியேற்றார். அவருக்கான அலுவலகம் இன்னும் தயாராகவில்லை. அவர்  ஏற்கனவே மாநில மொழிகள் ஆணைய தலைவராக பதவி வகித்து வருகிறார்.

 இதனால், கிரீன்வேஸ் சாலையில் உள்ள மாநில மொழிகள் ஆணைய அலுவலகத்தில் அவர் நேற்று பொறுப்பேற்றார். அவரிடம் திருச்சியை சேர்ந்த  சுரேஷ், சி.வரதராஜன், ஆதிகேசவன், அண்ணா பல்கலைக்கழகத்தை காப்போம் என்ற அமைப்பு ஆகியவற்றிலிருந்து சூரப்பா மீது வந்த புகார்கள், அது  தொடர்பான ஆவணங்கள் ஆகியவை அரசு தரப்பிலிருந்து தரப்பட்டது. இதையடுத்து, விரைவில் அவர் விசாரணையை தொடங்கவுள்ளதாக  கூறப்படுகிறது.இந்நிலையில், தனக்கு அலுவலகம், கூடுதல் பணியாளர்கள் மற்றும் உரிய கட்டமைப்பு ஆகியவை செய்து தரப்பட வேண்டும் என்று நீதிபதி  கலையரசன் உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எந்த பிரிவின் கீழ் விசாரணை?
அண்ணா பல்கலைக்கழக சட்டத்தின்படி சூரப்பா பணி காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெறும். தற்காலிக  பணியாளர்கள் நியமனம் மற்றும் இதர நியமனங்கள், சூரப்பா பணி காலத்தில் நடந்துள்ளதா? அவற்றில் நியமனம் செய்யப்பட்டவர்கள் உரிய  தகுதிகளை பெற்றுள்ளனரா? இதில் குற்றச் செயல்கள் நடந்துள்ளதா? ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் குற்றங்கள்  செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினாரா?

துணைவேந்தர் சூரப்பா காலத்தில் பல்கலைக்கழகத்திற்கு வந்த நன்கொடைகள், உதவிகள், பல்கலைக்கழகத்திற்கு வந்த கல்வி கட்டணங்கள்,  பல்கலைக்கழகத்தின் செலவினங்கள் இவற்றில் நடந்த நிதி மோசடிகள் ஆகியவை குறித்து நீதிபதி விசாரணை நடத்துவார். சூரப்பா காலத்தில் நடந்த  ஒப்பந்தங்கள், அவற்றில் பங்கேற்றவர்கள், நிறுவனங்கள், சங்கங்கள் ஆகியவை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும். சூரப்பா காலத்தில்,  அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளனவா? அதில் பங்கு கொண்டவர்கள் யார், யார் என்பது குறித்தும்  விசாரணை மேற்கொள்ளப்படும்.

மிகப்பெரிய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பதவி வகித்துவரும் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு, புகார்கள்  வந்து அதன் மீது விசாரணை நடத்தப்படுவது வட மாநில பல்கலைக்கழகங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் களின் ஆவணங்கள் அரசு தரப்பிலிருந்து நீதிபதி பி.கலையரசனிடம் தரப்பட்டது. இதையடுத்து,  விரைவில் அவர் விசாரணையை தொடங்கவுள்ளார்.

Tags : P. Kalaiyarasan ,Anna University ,deputy , Anna University. Corruption complaint against the deputy Judge P. Kalaiyarasan took charge
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!