×

இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில் மதுரை ரயில்வே கோட்டத்துடன் இணையுமா குமரி?..மீண்டும் விவாத பொருளாக மாறியது

நாகர்கோவில்: கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்தில் உள்ள ரயில்வே வழித்தடங்கள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் அமைந்து உள்ளது. ஆகவே இந்த பகுதிகள் பல்வேறு வழிகளிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
40 ஆண்டுகளாக இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. கேரளாவின் ஆதிக்கத்தில் இருப்பதால் குமரி மாவட்ட மக்கள் ரயில்வேத்துறை வளர்ச்சியில் வஞ்சிக்கப்படுகிறார்கள். குமரி மாவட்ட ரயில் நிலையங்கள் அபரிவிதமான வருமானத்தை ஈட்டித் தருகிறது. இருப்பினம் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்பது பொது மக்களின் குற்றச்சாட்டு. ரயில்கள் புறப்படும், வந்து சேரும் நேரங்கள், செல்லும் திசைகள் ஆகியவை குமரியை சேர்ந்த மக்களுக்கு பாதகமாகவும், கேரள மக்களுக்கு சாதகமாகவும் அமைக்கப்பட்டு உள்ளன. திருவனந்தபுரம் கோட்டம் பல்வேறு புறக்கணிப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மொபைல் செயலி வழியாக டாக்சி புக் செய்யும் வசதி, நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பிரிபெய்டு ஆட்டோ வசதி என்று நீண்ட காலமாக தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் இதுவரையிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருநெல்வேலி - ஜெபால்பூர் ரயிலால் கேரள பயணிகளுக்கு பயன் இல்லை. ஆகவே கன்னியாகுமரியில் இருந்து இயக்க திருவனந்தபுரம் கோட்டம் அனுமதி அளிக்கவில்லை. இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து புனலூருக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயிலுக்கு பதிலாக கன்னியாகுமரி- கொல்லம்  மார்க்கத்தில் மெமு ரயில் இயக்கப்பட்டது. திடீரென ஒரே நாளில் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது மெமு ரயில் பெட்டிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு இயங்கி வருகின்றது. இதே போல் குமரி மாவட்டத்தை சேர்ந்த ரயில் பயணிகளின் பல்ேவறு கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. தொடர்ந்து அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள 625 கி.மீ. தூரம் இருப்பு பாதையில், நாகர்கோவில் - திருவனந்தபுரம் 87 கி.மீ தூரம், நாகர்கோவில் - திருநெல்வேலி 74 கி.மீ தூரம் என 161 கி.மீ. நாகர்கோவில் துணை கோட்டத்தின் கீழ் வருகின்றது. குமரி மக்களின் நலனுக்காக நாகர்கோவில் துணை கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி நாகர்கோவில் - நேமம் மற்றும் நாகர்கோவில் - திருநெல்வேலி வரை உள்ள பாதையை மீண்டும் மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.  

குமரி மாவட்ட ரயில்வே வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பது தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களின் முக்கிய தேர்தல் அறிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இதுவரை வெற்றி பெற்ற எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தற்போது பாராளுமன்ற இடைதேர்தல் வர இருக்கின்றது. தேர்தல் தொடங்கும் நேரத்தில் மீண்டும் இந்த கோட்ட பிரச்னை விவாத பொருளாக மாறி இருக்கிறது. இடைதேர்தல் அறிவிப்புக்கு முன்பாக குமரி,  நெல்லை மாவட்ட ரயில்வே வழித்தடங்களை மதுரைக் கோட்டத்துடன் இணைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 40 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு காணபடுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இருப்பினும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Tags : Kumari ,Madurai , Will Kumari join the Madurai railway line as the by-elections approach?
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து