×

8 மாதங்களுக்கு பின்னர் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகை; வியாபாரிகள் மகிழ்ச்சி

ஊட்டி: கடந்த எட்டு மாதங்களுக்கு பின் நீலகிரி மாவட்டத்திற்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் முதன்முறையாக வந்துள்ளனர். இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இதனால் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால், நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம் சுற்றுலாப் பயணிகளை நம்பியே இருந்ததால், மாவட்டத்தின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.    இந்நிலையில், ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்தன. இதை தொடர்ந்து கடந்த மாதம் முதல் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம் சுற்றுலா பயணிகள் வர மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

கட்டாயம் இ-பாஸ் இருந்தால் மட்டுமே ஊட்டிக்கு வரமுடியும் என்ற நிலை இருந்தது. இதனால் மிகவும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நாளொன்றுக்கு 200 முதல் 500 வரையிலான சுற்றுலா பயணிகள் வருவது மிகவும் அரிதாக இருந்தது. இந்நிலையில், இம்மாதம் துவக்கம் முதல் முறை மேலும் எளிதாக்கப்பட்டு இ-என்ட்ரி மட்டும் செய்தால் போதும் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இம்மாதம் துவக்கம் முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று உயர்ந்தது. எனினும், கொரோனா தொற்று காரணமாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. நாள்தோறும் சுமார் 500 வரையிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்து சென்றனர். சுற்றுலாப் பயணிகள் வருகை சற்று அதிகரிக்கவே சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள், சுற்றுலாத் தலங்களுக்கு அருகே கடைகள் வைத்துள்ளவர்கள், தங்களது கடைகளை திறக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை மற்றும் வார விடுமுறை என இரு நாட்கள் விடுமுறை வந்த நிலையில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்பட்டது. 8 மாதங்களுக்கு பின்பு நேற்று நீலகிரி மாவட்டத்திற்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு நேற்று மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இது மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை நம்பி பல்வேறு தொழில் செய்துவரும் வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருவதால் தொற்று அதிகரிக்கும் என்ற அச்சம் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறது.

Tags : Ooty ,Merchants , 5,000 tourists visit Ooty after 8 months; Merchants are happy
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்