×

பக்கத்து வீட்டுக்காரரால் பிரச்னை; செல்போன் டவரில் ஏறி தொழிலாளி போராட்டம்

சத்தியமங்கலம்: பக்கத்து வீட்டுகாரரால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்(45). தச்சுதொழிலாளி. இவர் இன்று காலை திடீரென அப்பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர் சரவணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அவர் தனது பக்கத்து வீட்டுக்காரரான டிவி மெக்கானிக் சுரேஷ் என்பவர், எனக்கும், எனது குடும்பத்தாரிடம் பல்வேறு பிரச்னைகள் செய்வதாகவும், இதுகுறித்து சத்தியமங்கலம் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என கூறினார். இதை அடுத்து போலீசார் தொடர்ந்து சரவணனிடம் பேச்சுவார்த்தை  நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடந்து சரவணன் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். செல்போன் டவரில் ஏறி  சுமார் 3 மணி நேரம் போராட்டம் நடத்திய சரவணன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

Tags : neighbor ,cell phone tower , Problem with a neighbor; Worker struggle to climb cell phone tower
× RELATED செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு...