×

நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் இளைஞர்கள் பங்கு பெற குடியரசுத் துணைத் தலைவர் வேண்டுகோள்

ஹைதராபாத் : இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் அதிக அளவில் பங்கு பெற்று, புதிய வலுவான இந்தியாவை உருவாக்கும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று  குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் புதிய வசதிகள் மையத்தை தொடங்கி வைத்துப் பேசிய அவர், எதிர்மறை எண்ணங்களைக் களைந்து, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு ஊழல், வறுமை, ஏமாற்றுதல், பாகுபாடு முதலியவை இல்லாத புதிய இந்தியாவை கட்டமைக்க வேண்டுமென்று இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

நாட்டில் பல்வேறு சவால்கள் தற்போது நிலவி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவை வலுவாக்கும் அனைத்து முயற்சிகளிலும் இளைஞர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

படிப்பறிவின்மையை ஒழிப்பதிலும், நோய்களைக் குணப்படுத்துவதிலும், வேளாண்துறை சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்ளவும், பாகுபாடு முதலிய சமூக அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களிலும், ஊழலைக் களைவதிலும் இளைஞர்கள் வழிகாட்டியாக செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கொரோனா தொற்று முதல் பருவ நிலை மாற்றம் வரையிலான பல்வேறு பிரச்சினைகளுக்கு இளைஞர்கள் புதுமையான தீர்வுகளைக் காண வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி அவர்களை மேம்படையச் செய்வதில் முழுமையான கல்வி அவசியம் என்று குறிப்பிட்ட அவர், 21ஆம் நூற்றாண்டில் நிலவும் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும், அதே வேளையில் இந்தியப் பாரம்பரியத்துடனும், கலாச்சாரத்துடனும் இணைந்த கல்வி முறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கல்வித் துறையில் பண்டையக் காலங்களில் உலகளவில் சிறந்த மையமாக இந்தியா திகழ்ந்தது என்றும், உலகெங்கிலும் உள்ள மாணவர்கள் தட்சசீலா, நாலந்தா போன்ற  பல்கலைக்கழங்களில் கல்வி பயின்றதாகவும் கூறிய அவர், ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களும், மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்குவதில்  கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உயர்கல்வி நிறுவனங்களை தலைசிறந்த மையமாக உயர்த்துவதில் தனியார் துறை உள்ளிட்ட அனைவரும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட திரு வெங்கையா நாயுடு, சர்வதேச தரத்திலான கல்வியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.

உலக அளவில் தலைசிறந்த முன்னணி 200 உயர் கல்வி நிறுவனங்கள் அடங்கிய பட்டியலில் வெகு சில இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறிய அவர், நம் நாட்டின் பலதரப்பட்ட பல்கலைக்கழகங்கள், சிறந்த நிறுவனங்களாக உயர்வதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சர்வதேச தரப் பட்டியலில் முன்னேறுவதற்கு இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் கலாச்சாரம் மற்றும் புதுமையான ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்துவதுடன், சிறப்பாக செயல்படும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கத் தொகையையும் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கை, தரமான கல்வியை வழங்குவதில் மட்டுமல்லாமல், ஆளுமையை வளர்ப்பதிலும், அறிவியல் சார்ந்த சிந்தனையை ஏற்படுத்துவதிலும் கற்பனைத் திறனை ஊக்கப்படுத்துவதிலும், சேவை மனப்பான்மையை வளர்ப்பதிலும் 21ஆம் நூற்றாண்டின் சவால்களை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டு இருப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக திரு வெங்கையா நாயுடு கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பிற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்படுவதாகக் கூறிய அவர், முன்களப் போராளிகளான மருத்துவர்கள், விவசாயிகள், பாதுகாப்பு வீரர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கும், மத்திய மாநில அரசுகளுக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Tags : Vice President ,country , Youth, role, Republican vice president, request
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!