×

உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கமளிக்குமாறு ஆன்மிகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி : ஜெயினாச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் ஜி மகராஜின் 151-வது பிறந்த நாளைக் குறிக்கும் விதமாக அமைதிக்கான சிலையை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். சமண குருவை கவுரவிக்கும் விதமாக நிறுவப்பட்டுள்ள சிலைக்கு அமைதிக்கான சிலை எனப் பெயரிடப்பட்டுள்ளது. தாமிரத்தை பிரதானமாகக் கொண்டு எட்டு உலோகங்களால் வடிக்கப்பட்டுள்ள இந்த 151 அங்குல உயர சிலை, ராஜஸ்தான், பாலி, ஜேத்புராவில் உள்ள விஜய் வல்லப் சாதனா கேந்திராவில், நிறுவப்பட்டுள்ளது.

சமண ஆச்சாரியாருக்கும், நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆன்மிகத் தலைவர்களுக்கும் பிரதமர் மரியாதை செலுத்தினார். சர்தார் வல்லபாய் படேல், ஜெயினாச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் ஜி மகராஜ் ஆகிய இரண்டு வல்லபர்களைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், உலகத்தின் மிக உயரமான சிலையான சர்தார் படேலின் ஒற்றுமைக்கான சிலையை திறந்து வைக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்ததாகவும், தற்போது ஜெயினாச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப்பின் சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் தனது நோக்கத்தை மீண்டும் வலியுறுத்திய திரு மோடி, சுதந்திரப் போராட்டத்தின் போது நடைபெற்றது போல, தற்சார்பு இந்தியாவின் செய்தியை ஆன்மிகத் தலைவர்கள் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்றும், உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கமளிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். தீபாவளியின் போது உள்ளூர் பொருட்களுக்கு, நாடு ஆதரவளித்தது உற்சாகத்தை அளிப்பதாக அவர் கூறினார்.

அமைதி, அகிம்சை மற்றும் நட்புறவுக்கான வழியை உலகத்துக்கு என்றுமே இந்தியா காட்டுவதாக பிரதமர் கூறினார். உலகம் இன்றைக்கு அதே போன்றதொரு வழிகாட்டுதலை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்கிறது. இந்தியாவின் வரலாற்றை நீங்கள் திரும்பி பார்த்தீர்களேயானால், எப்போதெல்லாம் தேவை எழுந்ததோ, அப்போதெல்லாம் சமுதாயத்துக்கு வழிகாட்டுவதற்காக ஒரு புனிதர் தோன்றியுள்ளார். ஆச்சர்யா விஜய் வல்லப் அப்படிப்பட்ட ஒரு துறவியாவார். சமண குருவால் நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்களைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவியதன் மூலம், கல்வித் துறையில் நாட்டை தற்சார்பாக்க அவர் முயற்சி செய்தார் என்று புகழாரம் சூட்டினார். நாட்டுக்கு சிறப்பான சேவையாற்றியுள்ள எத்தனையோ தொழிலதிபர்கள், நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்களை இந்த நிறுவனங்கள் உருவாக்கியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

பெண்கள் கல்வியில் இந்த நிறுவனங்கள் ஆற்றியுள்ள சேவைகளுக்காக, நாடு இவற்றுக்கு கடன்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார். கடினமான காலகட்டங்களில் மகளிர் கல்வி என்னும் சுடரை தொடர்ந்து உயிர்ப்புடன் இந்த கல்வி நிறுவனங்கள் வைத்திருந்தன. பெண் குழந்தைகளுக்காக பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவிய ஜெயின் ஆச்சாரியர், பெண்களை முன்னணிக்குக் கொண்டு வந்தார். ஆச்சார்ய விஜய் வல்லப் அவர்களின் வாழ்க்கை முழுவதும் ஒவ்வொரு உயிரினத்தின் மீதான அன்பு, கருணை மற்றும் நேசத்தால் நிரம்பியிருந்தது என்று பிரதமர் கூறினார். அவரது ஆசிர்வாதத்தால், பறவைகள் மருத்துவமனையும், பல்வேறு கோசாலைகளும் இன்று நாடு முழுதும் செயலாற்றுகின்றன. இவை சாதாரண நிறுவனங்கள் அல்ல, இவை இந்தியா என்னும் உணர்வின் உருவகம் மற்றும் இந்தியா மற்றும் இந்திய மதிப்புகளின் அடையாளங்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Tags : Modi ,leaders , Local, Inspirational, Spiritual Leaders, Prime Minister Modi, Request
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...