×

2 ஆண்டுகள் நிறைவடைந்தும் கஜா புயலில் இருந்து மீளாத டெல்டா மக்கள்!: முறையான வீடுகளின்றி நூற்றுக்கணக்கானோர் தவிப்பு..!!

நாகை: நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களையே புரட்டி போட்ட கஜா புயல் வீசி 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனாலும் உப்பளத் தொழிலாளர்கள் விவசாயிகள் என பலரும் இன்னும் புயலின் தாக்கத்தில் இருந்து மீள முடியாத சூழலிலேயே உள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி நள்ளிரவில் வீசிய கஜா புயலால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். மீனவர்கள், விவசாயிகள் என பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பாதிப்புக்குள்ளாகினர். வீடுகளை இழந்த சிலருக்கு மீண்டும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டாலும் நூற்றுக்கணக்கானோர் முறையான வீடுகள் இன்றி இன்றும் தவித்து வருகின்றனர். வேதாரண்யத்தில் பாதிக்கப்பட்ட உப்பளத் தொழிலாளர்களை நேரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். அச்சமயம் அரசு தருவதாக உறுதி அளித்த நிவாரணத் தொகை 2 ஆண்டுகள் ஆகியும் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

காரைக்கால் அருகே கஜா புயலால் தரைதட்டி நின்ற கப்பல் ஒன்று நினைவு சின்னமாகவே மாறிவிட்டது. காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தின் முகப்புப் பகுதியை ஆழப்படுத்துவதற்காக மும்பை நிறுவனத்தை சேர்ந்த வீரா பிரேம் என்ற கப்பல் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் வீசிய கஜா புயலில் சிக்கிய துறைமுகத்தில் இருந்து நகர்ந்த கப்பல், வடக்கு வாஞ்சூர் கடற்கரையில் தரைதட்டி நின்றது. 2 ஆண்டுகளாக கப்பலில் இருந்து மீட்கப்படாத உபகரணங்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடுவது தொடர்கதையாகிவிட்டது. இதனை கஜா புயலின் நினைவு சின்னமாகவே பார்க்கும் உள்ளூர் மக்கள், கப்பலில் உள்ள எரிபொருள் கடலில் கொட்டுவதற்கு முன் அதனை அகற்ற வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags : Delta ,Hundreds ,storm ,houses ,Kazha , Hurricane Kaza, delta people, proper housing, hundreds of suffering
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை