×

என்ன வளம் இல்லை இந்த மாவட்டத்தில் நெல்லை புதிய கலெக்டருக்கு காத்திருக்கும் சவால்கள்: தொழில் திட்டங்கள் நிறைவேறுமா?

நெல்லை: நெல்லையில்  இருந்து தென்காசி மாவட்டம் பிரிந்து ஓராண்டு ஆகி விட்ட நிலையில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் புதிய கலெக்டருக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கிறது. நெல்லை மாவட்ட கலெக்டராக கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற ஷில்பா பிரபாகர் சதீஷ் தமிழக சுகாதாரத் துணை இணைச் செயலாளராக மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னையில் திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநராக பணியாற்றிய விஷ்ணு நெல்லை கலெக்டராக நியமிக்கப்பட்டார். புதிய கலெக்டர் விஷ்ணு ஏற்கெனவே சேரன்மகாதேவி சப் கலெக்டராக இரண்டரை ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நேற்று மாலை நெல்லை கலெக்டராக விஷ்ணு பொறுப்பேற்றுக் கொண்டார்.

நெல்லை மாவட்டத்தில் தொழில் வளத்தை பெருக்க புதிய கலெக்டருக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. அதாவது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் சாதி கலவரங்கள் நடந்த போது, அதுகுறித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி மறைந்த ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான கமிஷன், தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு இல்லாதது தான் கலவரங்களுக்கு காரணம். எனவே தொழில் வளத்தை பெருக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்தது.

அந்த கமிஷனின் பரிந்துரைப்படி 1996 - 2001 திமுக ஆட்சிக் காலத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த போது மறைந்த முன்னாள் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறன்  நாங்குநேரி உயர் தொழில்நுட்ப பூங்கா திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் திட்டத்தின் முழு பலனும் நிறைவேறாமல் உள்ளது. இடையில் ஒரு சில நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்கிய போதிலும் அரசின் ஒத்துழைப்பு இல்லாதது, கண்டு கொள்ளாத பார்வை, தொழில் துவங்க பல்வேறு இடையூறுகள் என திட்டம் இன்று வரை பலன் தராமல் உள்ளது.

இந்த திட்டத்தால் நெல்லை - வள்ளியூர் வரையிலான நான்கு வழிச் சாலையில் நிலங்கள் மட்டுமே விலை உயர்ந்துள்ளதே தவிர, இன்று வரை திட்டம்  நிறைவேறவில்லை. இந்த திட்டம் நிறைவேறி இருந்தால் படித்த இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். பின் தங்கிய பகுதியான நாங்குநேரி முன்னேற்றம் அடைந்திருக்கும். மறைமுக வேலவைாய்ப்பு பெருகி இருக்கும். அடுத்து கடந்த 2006 -2011 திமுக ஆட்சிக் காலத்தில் பொறியியல் பட்டம்பெற்ற பட்டதாரிகள் உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு பெறுவதற்காக எல்காட் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்ட கங்கைகொண்டான் ஐடி பார்க் திட்டம்.

இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி குடும்பத்தை விட்டு சென்னை, பெங்களூருக்கு மட்டுமே பயணித்து வந்த நிலையில், அவர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொலைநோக்குடன் கொண்டு வரப்பட்டது தான் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்கா (ஐடி) அமைக்கும் திட்டம். அதற்காக நிலம் கையகப்படுத்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டிடமும் எழுப்பி திறக்கப்பட்ட நிலையில் கடந்த 2011ம் ஆண்டு திறக்கப்பட்ட கங்கைகொண்டான் ஐடி பார்க் இன்று வரை நெல்லை - மதுரை சாலையில் செல்வோருக்கு காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.

நெல்லை சிப்காட்டில் குளிர்பான நிறுவனம், டயர் தொழிற்சாலை என பல்வேறு தொழில்கள் வந்தாலும், ஐடி பார்க் திட்டம் மட்டும் இன்று வரை செயல்பாட்டிற்கு வரவில்லை. இந்த பூங்கா திறக்கப்பட்டது முதல் செயல்பாட்டிற்கு வந்திருந்தால் கடந்த 9 ஆண்டுகளில் நெல்லையும் குட்டி பெங்களூரு போன்றோ, நெல்லையின் ‘ஓஎம்ஆர்’ போன்றோ மாறியிருக்கும். அந்த அளவுக்கு மனிதவளம் மிக்க இன்ஜினியர்கள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் போன்ற தென் மாவட்டங்களில் உள்ளனர். இந்த ஐடி பார்க் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் நெல்லையில் ஓட்டல்கள், டூரிஸ்ட், வணிகம் என வர்த்தகம் பல மடங்கு உயர்ந்திருக்கும். பல ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கும். ஆனால் இந்த கட்டிடம் திறப்பு விழா முடிந்த கையோடு இன்று வரை காட்சிப் பொருளாகவே நிற்கிறது.

இந்த மெகா திட்டங்கள் இரண்டையும் செயல்படுத்தினாலே நெல்லை மாவட்டம் இன்று தமிழகத்தில் தொழில் துறையில் முக்கிய இடத்திற்கு உயர்ந்திருக்கும். ஒரு நகரம் தொழில் வளர்ச்சி பெற முக்கிய தேவை சாலைகள், போக்குவரத்து வசதி, விமான நிலையம், தொழிலதிபர்கள் வந்து தங்கி செல்ல ஓட்டல்கள் போன்றவை தான். நாங்குநேரி, கங்கைகொண்டானிற்கு தரமான நான்கு வழிச் சாலை வசதி இருந்தும், தூத்துக்குடி விமான நிலையம், நெல்லையில் உயர்தர ஓட்டல்கள் என அனைத்து வசதிகளும் இருந்தும் தொழில் திட்டங்கள் மட்டும் இன்று வரை முன்னெடுக்கப்படாமல் உள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்த புதிய கலெக்டர் முயற்சி எடுத்தால் நெல்லை மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும். தொழில் துறையில் சென்னை, கோவை போன்று தென் மாவட்டத்தில் நெல்லையையும் உயர்த்த முடியும் என்பது மட்டும் உண்மை.

* அனுபவம் கை கொடுக்குமா?
புதிய கலெக்டர் விஷ்ணு சேரன்மகாதேவி சப் கலெக்டராக பணியாற்றியவர். அங்கு தான் நெல்லை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் உள்ளன. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தாமிரபரணி தண்ணீர் தான் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் விவசாயம், குடிநீர் தேவைக்கான உயிர்நாடி. ஆனால் இந்த ஆற்று மண்ணை கபளீகரம் செய்யும் கும்பல் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மதுரை ஐகோர்ட் கிளை மூலம் தான் தாமிரபரணி கடந்த 10 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட எம் சாண்ட் என்ற பெயரில் முறைகேடாக ஆற்று மண்ணை தோண்டியது அம்பலமானது.

இதற்காக அந்த குவாரிக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.9.50 கோடி. மீன் குட்டைக்கு தோண்டிய மண்ணை கூட வேளாண்மை பொறியியல் துறை தனியாருக்கு விற்று தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டது. ஆற்று மணல் பிரச்னையில் நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு ஐகோர்ட் அடுத்தடுத்து பல்வேறு உத்தரவுகளை அளித்தது. கனிம வளத் துறை உயர் அதிகாரிகளும் இதில் சிக்கியதால் பணியிட மாற்றத்திற்கு ஆளானார். இந்த ஆற்றையும், ஆற்றின் வளத்தையும், மணல் பரப்பையும் பாதுகாப்பதில் நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கும், புதிய கலெக்டர் விஷ்ணுவிற்கு பெரும் பொறுப்பு உள்ளது. அதற்கு அவரது சப் கலெக்டர் அனுபவம் கை கொடுக்கும்.

* முதல் நதிநீர் இணைப்பு திட்டம் நிறைவேறுமா?
நெல்லை மாவட்டத்தில் மழைக் காலங்களில் தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வறட்சியான திசையன்விளை, ராதாபுரம், தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக ரூ.369 கோடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது தான் வெள்ள நீர் கால்வாய் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு ஆகிய மூன்று ஆறுகளையும் இணைக்க திட்டமிடப்பட்டது. நாட்டிற்கே முன்னோடியாக செய்படுத்தப்பட்ட முதல் நதிநீர் இணைப்பு திட்டம் இது தான். ஆனால் 4 பிரிவுகளாக செயல்படுத்த தீட்டப்பட்ட இந்த திட்டம் எப்போதோ நிறைவேறியிருக்கும்.

10 ஆண்டுகளுக்கும் மேல் கிடப்பில் போடப்பட்டதால் இன்று திட்ட மதிப்பீடு ரூ.850 கோடியை தாண்டியிருக்கிறது. 4வது பகுதிக்கான திட்டம் சமீபத்தில் தான் துவக்கி வைக்கப்பட்டது. வெள்ளாங்குழியில் உள்ள கன்னடியன் கால்வாயில் இருந்து துவங்கும் இந்த திட்டம் என்று நிறைவேறுகிறதோ, சாத்தான்குளம் பகுதிக்கு என்று தாமிரபரணி தண்ணீர் வெள்ள நீர் கால்வாயில் செல்கிறதோ அப்போது தான் இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறும். இந்த திட்டத்தை விரைவுபடுத்தி செயல்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு புதிய கலெக்டருக்கு காத்திருக்கிறது.

* மக்களால் உருவான ‘விஷ்ணு நகர்’
சேரன்மகாதேவி சப்.கலெக்டராக 5 செப்.2014 முதல் 19 மே 2017 வரை பணியாற்றிய இவர் சேரன்மகாதேவி கோட்டத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் திசையன்விளை ஆகிய 5 தாலுகாக்களில் பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்தார். கடையம் யூனியனுக்குட்பட்ட மந்தியூர் கிராமம் மேலத்தெருவில் வசிக்கும் சுமார் 40 குடும்பத்தினர் 10 வருடங்களுக்கும் மேலாக தங்களது பகுதிக்கு மின்சாரம், குடிநீர் மற்றும் சாலை வசதி வேண்டி தாசில்தார் உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகளிடம் மன்றாடி வந்தனர்.

இதுகுறித்து அப்போது சேரன்மகாதேவி சப்.கலெக்டராக பணியாற்றி விஷ்ணுவிற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட சப்.கலெக்டர் விஷ்ணு அப்பகுதி மக்களுக்கு 15 நாட்களில் குடிநீர், மின்சாரம் மற்றும் சாலை வசதியை செய்து கொடுத்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தங்களது பகுதிக்கு விஷ்ணு நகர் என சப்.கலெக்டரின் பெயரை சூட்டினர். சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறை இருந்துவந்தது. விபத்து காலங்களில் இம்மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டது குறித்து அறிந்த விஷ்ணு தென்காசி மருத்துவ துணை இயக்குநரை நேரிடையாக வரவழைத்து கூடுதல் டாக்டர்கள் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கிடைக்க ஏற்பாடு செய்ததை அப்பகுதி மக்கள் இன்றும் பெருமையுடன் நினைவு கூர்கின்றனர்.


Tags : district , What is not resource Challenges awaiting the new collector of paddy in this district: Will the business plans be fulfilled?
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...