சோளிங்கரில் பண்டைய காலத்திற்கு கொண்டு செல்லும் பொக்கிஷங்கள் அரசு பள்ளி ஆசிரியரின் வீட்டில் மினி அருங்காட்சியகம்: 40 கி.மீ தொலைதூரத்தை காட்டும் பைனாகுலர்; ராஜ ராஜ சோழன் வெளியிட்ட நாணயங்கள்

சோளிங்கர்: சோளிங்கர்  அருகே அரசு பள்ளி ஆசிரியர் பண்டைய கால பொருட்களைக் கொண்டு வீட்டில் மினி அருங்காட்சியகமே வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் வசிக்கும் ப.நா.கவுதமன். சோளிங்கர் அடுத்த நந்தி மங்கலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கல்பனா  அரசு நிதி உதவிப்பள்ளியில் ஆசிரியை. ஆசிரியர் தம்பதி வீட்டில் வைத்துள்ள பழங்கால பொருட்கள் வரலாற்றின் நினைவு சின்னங்களாக உள்ளது.

பண்டைய காலத்து அரிய பொக்கிஷங்கள் சேகரிப்பு குறித்து ஆசிரியர் கவுதமன் கூறியதாவது:   நான் சிறு வயது முதலே பழமையான பொருட்களை சேகரித்து வருகிறேன். எனது தந்தை நாகலிங்கம் மற்றும் எனது பாட்டி பல்வேறு பழைமையான பொருட்களை தூக்கி எறியாமல் வீட்டில் பாதுகாத்து வைத்திருந்தனர். இதைப்பார்த்து நானும் பழமையான பொருட்களை சேகரிக்க தொடங்கினேன். இப்போது பல்வேறு பொருட்களை சேகரித்து அதனை காட்சிப்படுத்தி வருகிறோம். கற்கால மனிதர்கள் பயன்படுத்திய  கூர்மையான ஆயுதங்கள், அதனைத் தொடர்ந்து கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழரின் பண்டைய நாகரிகத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் 3,000 ஆண்டுகள் பழமையான சுடுமண் ஆபரணங்கள் மற்றும் மரம் கல்லாக மாறிய கல் மரம் என்று சொல்லக்கூடிய பாஸில்ஸ், இவை 220 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக உள்ளது.

அரசர்கள் அரண்மனையில் பயன்படுத்திய பழமையான பூட்டு, மதுரை நாயக்கர்கள் பயன்படுத்திய வீச்சுவாள், உடைவாள், நம் முன்னோர்கள் பயன்படுத்திய 130 ஆண்டுகள் பழமையான அரிசி அளவை படி, மரக்காய். 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொருட்களையும் துல்லியமாக பார்க்க பயன்படுத்திய 1915 ஆம் ஆண்டைய பைனாகுலர். காவிரி ஆற்றுப் படுகைகளிலும் பூம்புகார் ஆற்றுப் படுகைகளிலும் கிடைக்கப்பெற்ற பழங்காலத்து ஆபரணங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தி இருக்கிறோம். சோழர் காலத்து சுடுமண் சிற்பங்கள், சுடு மண் பானைகள் மண்பாண்டங்கள், மேலும் 300 ஆண்டுகள் பழமையான சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட தஞ்சை ஓவியங்கள் 300- 350 ஆண்டுகள் கடந்தும் இன்றும் புதுப்பொலிவுடன் மங்காமல் உள்ளது.

250 ஆண்டுகள் வயதுடைய ஓலைச்சுவடிகள், முனிவர்களும் சித்தர்களும் செய்யுள் வடிவில் எழுதியுள்ள மருத்துவ குறிப்புகள், ஓலைச்சுவடி எழுதப் பயன்படுத்திய எழுத்தாணி மற்றும் அதற்காக தொகுத்த பல ஓலைச் சுவடிகள் உள்ளது.

மேலும்  தூதுவர்கள்  பயன்படுத்திய தூது ஓலை பெட்டி, சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட எடைக்கல் சுமார் 10 கிலோ எடை கொண்ட ஒரே கல்லால் ஆனது. இந்த எடைக்கல் இது ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கருப்பு, வெள்ளை புகைப்படங்கள் எடுக்கக்கூடிய  கேமரா முதல் டிஜிட்டல் கேமரா, 150 ஆண்டுகள் பழமையான கப்பல் மாலுமிகள் பயன்படுத்திய கடிகாரம், அமெரிக்கன் கடிகாரம், காந்தியடிகள் பயன்படுத்திய  சிறிய அளவு கடிகாரம் இப்படி பல வகையான கடிகாரங்கள் உள்ளன.

மேலும் மாய விளக்கு, குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருட்கள், அதனை தொடர்ந்து 100 ஆண்டுகள் பழமையான புத்தகங்கள் 1908ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட தமிழ் புத்தக நூலான பன்மணி கொத்து சேக்கிழார் எழுதிய நூல்கள். தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் வெளியிட்ட நூல்கள்  தமிழோசை நூல்கள் என்று நூற்றாண்டு பழமையான புத்தகங்களை தொகுத்து வைத்துள்ளோம். பழங்காலத்து மின்சாதன பொருட்கள் மேலும் 80 ஆண்டுகள் முற்பட்ட கருப்பு வெள்ளை சாலிடர் டிவி மற்றும் 5 இன்ச் அளவுள்ள சிறிய டிவி, தானியங்களை சேமித்து வைக்கும் (உறை) நெற்குதிர் மற்றும் முதுமக்கள் தாழி என்று சொல்லக்கூடிய சுடுமண் மண்பாண்டங்கள், 120 ஆண்டுகள் பழமையான சுவர் கடிகாரங்கள் உட்பட அரிய பொருட்களை சேகரித்து காட்சி படுத்தியுள்ளோம். எங்கள் வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் பார்த்து வியக்கின்றனர். மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் காட்சிபடுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

* சோழர் முதல் முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட நாணயங்கள் வரை

சோழர் காலத்து நாணயங்கள், ராஜராஜசோழன் வெளியிட்ட நாணயங்கள், செப்பு நாணயங்கள், ராஜேந்திர சோழர் காலத்து நாணயங்கள், கரிகால சோழன் நாணயங்கள் அவரை தொடர்ந்து சுல்தான்கள் நாணயம் மற்றும் மவுரியர்கள் நாணயம், முகலாயர்கள் நாணயம், மைசூர் மகாராஜா வெளியிட்ட நாணயங்கள் அரசர்கள் தொடர்ந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பிரிட்டிஷ் இந்தியா நாணயங்கள் 1800ம் ஆண்டு 1900ம் ஆண்டு வரை வெளியிட்ட விக்டோரியா ராணி காலத்து நாணயங்கள், எட்வர்ட் மன்னர் காலம் மற்றும் 5ம் ஜார்ஜ் மன்னர், 6ம் ஜார்ஜ் மன்னர் என்று 1946ம் ஆண்டு வரை அனைத்து நாணயங்களும் ஆசிரியர் காட்சி படுத்தியுள்ளார்.

நூற்றாண்டு நாணயங்கள், காலணா அரையணா, ஓரணா, 1 பைசா, 2 பைசா என்று தொடங்கி இன்று உள்ள ஐந்து ரூபாய் பத்து ரூபாய் நாணயங்கள் வரை வைத்துள்ளார். தலைவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட நாணயங்கள் திருவள்ளுவர் நினைவாக வெளியிடப்பட்ட நாணயம் ராஜராஜ சோழன் 1000 வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட நாணயம், தொடர்ந்து சில குறிப்பிட்ட தினங்களில் நாணயங்கள் துறைசார்ந்த நினைவு நாணயங்கள் உலக இளைஞர்கள் கிராமப்புற பெண்கள் விழிப்புணர்வு வெளியிடப்பட்ட நாணயங்கள் என்று சோழர் முதல் முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட நாணயங்கள் வரையில் சேகரித்து வைத்துள்ளார்.

Related Stories:

>