×

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடைதிறப்பு: ரூ.10 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கும்?

* கொரோனா பரவலைத் தடுக்க கேரள அரசு புதிய கெடுபிடி
* சீசன் தொழில்நடத்தும் தமிழக, கேரள வியாபாரிகள் கவலை

கம்பம்: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, ஐயப்ப பக்தர்களுக்கு கேரள அரசு கடும் கெடுபிடிகளை விதித்துள்ளதால், பக்தர்களின் வருகை குறைந்து ரூ.10 ஆயிரம் கோடி வரை வர்த்தக பாதிப்பு ஏற்படும் என தமிழக - கேரள வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், ஆண்டுதோறும் சீசன் காலங்களில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய செல்வது வழக்கம். இந்தாண்டு கொரோனா பாதிப்புகளால் கடந்த மார்ச் முதல் சபரிமலையில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஐப்பசி மாத பூஜைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் இன்று (நவ. 16) தொடங்குகிறது. இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜை டிச. 26 மற்றும் மகர விளக்கு பூஜை 2021, ஜன. 14ல் நடக்க உள்ளது. கேரளாவில் லட்சக்கணக்கானோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கேரள அரசின் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரையின்பேரில், கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு, கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கேரள அரசின் கட்டுப்பாடுகள் வருமாறு:
* இந்தாண்டு ஐயப்பன் கோயில் சீசனில் தினசரி ஆயிரம் பேரும், சனி, ஞாயிறு நாட்களில் 2 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுவர்.
* கோவிட் - விஜிலென்ஸ் போர்ட்டல் என்னும் ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே, சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
* தரிசனத்துக்கு 24 மணிநேரத்துக்கு முன் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்தச் சான்றிதழை ஜாக்ரதா போர்ட்டலில் பதிவேற்றவேண்டும்.
* தேவசம் போர்டு சார்பில் நிலக்கல்லில் பக்தர்கள் ஆன்ட்ரோஜன் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். இதற்கான கட்டணம் ரூ.650ஐ பக்தர்கள் கட்டவேண்டும்.
* பம்பாவிலிருந்து செல்லும் டிராக்டர் பாதை வழியாக மட்டுமே சன்னிதானம் செல்ல வேண்டும். எருமேலி, பெரும்பாதை, அழுதா, வண்டிப்பெரியார் புல்மேடு, பெரும்பாதை வழியாக செல்லக்கூடாது.
* 10 வயதுக்குட்பட்ட சிறார், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அனுமதியில்லை.
* மண்டல பூஜை தினமான டிச. 26 மற்றும் மகரவிளக்கு தினமான ஜன. 14 ஆகிய நாட்களில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே நிபந்தனைகளுக்கு உட்பட்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
* பம்பை நதியில் குளிக்கக் கூடாது. குளிப்பதற்கு தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பம்பையில் தங்கக்கூடாது.
* தரிசனம் முடிந்த பக்தர்கள் சன்னிதானத்திலிருந்து உடனடியாக கிளம்ப வேண்டும். அங்கு தங்க அனுமதியில்லை.
* பக்தர்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்ய முடியாது. நெய் பாத்திரங்களை அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டரில் ஒப்படைக்க வேண்டும்.
* அரவணை, அப்பம் சிறப்பு கவுன்ட்டர்கள் மூலம் விற்கப்படும்.இவ்வாறு கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் மேல் பக்தர்கள் தரிசனம் செய்து வந்த நிலையில், இந்தாண்டு சீசன் முழுவதும் ஒரு லட்சம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்வர் என தெரிகிறது.

* ரூ.10 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்படும்?
கேரள அரசின் கட்டுப்பாடுகளால் ஐயப்ப சீசனில் நடக்கும் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என தமிழக - கேரள வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். ‘‘சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சுமார் ரூ.10 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்படும். காவி, நீலம், கறுப்பு கலர் வேட்டிகள் என 10 லட்சம் வேட்டி விற்பனை பாதிக்கப்படும். தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து பக்தர்களை ஏற்றி வரும் வாகன உரிமையாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டும். நிலக்கல்லில் மட்டும் இந்தாண்டு நூறு கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும்’’ என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நிலக்கல்லைச் சேர்ந்த கேரள வியாபாரி சின்னு கூறுகையில், ‘‘நிலக்கல்லில் உள்ள கடைகள் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை தேவசம் போர்டு சார்பில் ஏலம் விடப்படும். இந்தாண்டு ஏலம் எடுக்க ஆள் இல்லை. அரசின் கட்டுப்பாடுகளால் பக்தர்கள் குறைவாகவே வருவர். லட்சக்கணக்கான பணத்தை முடக்கி என்ன பயன்?’’ என்கிறார். நிலக்கல்லில் கடை ஏலம் எடுத்து நடத்தும் தேனி, சித்தார்பட்டியைச் சேர்ந்த குணசேகரன் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் ஐயப்ப சீசனில் கடை ஏலம் எடுப்போம். இந்தாண்டு கொரோனாவாலும், அம்மாநில அரசின் கெடுபிடிகளாலும் பக்தர்கள் வருகை குறைவாகவே இருக்கும். இதனால், பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் மாலை அணியவில்லை’’ என்கிறார்.

குமுளியில் சிப்ஸ், ஸ்பைசஸ் கடை நடத்தும் முகமது ரசீத் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் குமுளியில் ஐயப்ப சீசன் காலங்களில் ஏத்தக்காய் சிப்ஸ், அல்வா மற்றும் ஸ்பைசஸ் பொருட்கள் ரூ.500 கோடிக்கு மேல் விற்பனையாகும். கேரள அரசின் கெடுபிடிகளால் இந்தாண்டு ஒரு லட்சம் பேர் மட்டுமே வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் கேரளாவை விட்டு வெளியேறி விடவேண்டும். இல்லையென்றால் தனிமைப்படுத்தப்படுவர். குமுளி மட்டுமல்லாமல் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் வழிகளான செங்கோட்டை, செங்கனூர், எர்ணாகுளம், வாளையார் செக்போஸ்ட், பத்தினம்திட்டா, புனலூர், குருவாயூர், எருமேலி, பத்மநாபபுரம், சோட்டாணிக்கரை, கன்னியாகுமாரி ஆகிய ஊர்களைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐயப்பன் கோயில் சீசனை நம்பியுள்ள ஓட்டல், மேன்ஷன், புகைப்படம், மருந்துக்கடை, பலசரக்கு, எரிபொருள், ஜவுளி, பழவகைகள், பேக்கரி மற்றும் கடலை பொறி விற்பவர்கள் என பல லட்சம் பேருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஐயப்பன் கோயில் வருமானம் ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கு மேல் வரும். மொத்தமாக இந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் பாதிப்பு ஏற்படும்’’ என்கிறார்.

* ஆன்லைன் பாஸ் இருந்தால் அனுமதி
தேனி மாவட்டம், குமுளி வழியாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், ஆன்லைன் பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்காக குமுளியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் ஐயப்ப பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை முடிந்து, வருவாய்த்துறை மற்றும் அம்மாநில போலீசார் விசாரணை முடிந்த பிறகே கேரளாவுக்குள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் கேரளாவை விட்டு வெளியேறி விட்டார்களா என சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட கேரள போலீசாரிடம், இங்குள்ள போலீசார் விசாரணை நடத்துவர். இம்முகாம் 2021, ஜன. 20 வரை செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* பள்ளிவாசலுக்கும் வருமானம் இழப்பு
ஐயப்பனின் தோழர் வாவேருக்கு எரிமேலியில் பள்ளிவாசல் உள்ளது. இங்கிருந்து ஐயப்ப பக்தர்கள் பின்னோக்கி நடந்து தர்மசாஸ்தா கோயிலுக்கு செல்வர். இது சாஸ்திரம். கன்னிச்சாமிகள் தத்துவமஸி கோயிலில் இருந்து பேட்டை துள்ளல் செய்தும், வாவேர் பள்ளியில் தேங்காய் உடைத்து காணிக்கை செலுத்தியும் வாவேரையும் வழிபடுவர். இந்து - முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக வாவேர் பள்ளிவாசல் உள்ளது. ஐயப்ப பக்தர்கள் வருகை குறைவால், பள்ளிவாசலுக்கும் வருவாய் பாதிப்பு ஏற்படும்.

* நவ. 2ல் முடிந்த ஆன்லைன் புக்கிங்
நவ. 2ம் தேதி சபரிமலை செல்ல ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டது. ஆனால், முன்பதிவு துவங்கிய அன்றே புக்கிங் முழுவதுமாக முடிந்ததாக கூறப்படுகிறது.

Tags : walk ,Sabarimala , Sabarimala walk for zonal pujas: Will Rs 10 billion affect trade?
× RELATED உடையார்பாளையத்தில் வடபத்திர காளியம்மன் வீதி உலா