வடஇந்தியாவை போல தமிழகத்திலும் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்குகிறதா?: பழனியில் இடத்தகராறு காரணமாக ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்..!!

திண்டுக்கல்: பழனியில் இடத்தகராறு காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பழனிசாமி, சுப்பிரமணியன் ஆகியோர் காயமடைந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில் அண்டை காலமாக துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி வருவது அனைத்து தரப்பினரிடையே கவலையடைய செய்திருக்கிறது. தமிழகத்தில் ஒரே வாரத்தில் 3-வது துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த வாரம், சென்னை சவுகார்பேட்டையில், சினிமா பைனான்சியர் தலி சந்த், அவரது மனைவி புஷ்பா மற்றும் மகன் ஷீத்தல் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதோடுமட்டுமின்றி, வீட்டில் இருந்த பலகோடி ரூபாய் நகை மற்றும் சொத்து ஆவணம், பணம் ஆகியவற்றை தூக்கிக்கொண்டு கொள்ளை கும்பல் தப்பியோடியது. சொத்து தகராறில் இந்த கொலை நடைபெற்றதாக தெரிவித்த போலீசார், இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து, திருக்கோவிலூர் அருகே மளிகை கடைக்காரர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதற்கிடையே பழனியிலும் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பழனியில் இடப்பிரச்சனை காரணமாக தியேட்டர் உரிமையாளர் நடராஜன் என்பவர் தனது கைத்துப்பாக்கியால் இருவரை சுட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறார். இந்த துப்பாக்கிச்சூட்டில் பழனிசாமி, சுப்பிரமணியன் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் நடைபெறும் துப்பாக்கிசூட்டில் பெரும்பாலும் கள்ளத்துப்பாக்கிகளே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து இந்த கள்ளத்துப்பாக்கிகள் தமிழகத்திற்குள் அதிகளவில் வருகின்றன.

குறிப்பாக 1500 ரூபாய்க்கு கள்ளத்துப்பாக்கிகள் கிடைக்கப்பெறுவதால் பலர் சட்டவிரோத செயல்களில் எளிதாக ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, தமிழகத்தில் இதுவரை எவ்வளவு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது? கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களுக்கு இதுபோன்ற கள்ளத்துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகிறதா? இது தொடர்பாக எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>