இந்தியா தீவிரவாதம் செய்கிறதா? பாக். குற்றச்சாட்டு வெறும் கட்டுக்கதை: வெளியுறவு அமைச்சகம் பதிலடி

புதுடெல்லி: ‘பாகிஸ்தானில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் கூறியிருப்பது வெறும் கட்டுக்கதை,’ என்று இந்தியா மறுத்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியும், அந்நாட்டு ராணுவ தகவல் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகரும் நேற்று முன்தினம் இஸ்லாமாபாத்தில் மிகப்பெரிய பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர். அதில், ‘பாகிஸ்தானில் நடந்த சில தீவிரவாத தாக்குதல்களுக்கு பின்னணியில் இந்தியா உள்ளது. ப்கானிஸ்தானிலும், இந்தியாவிலும்  அது 87 தீவிரவாத பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியில் இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’வை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஆதாரத்துடன் சிக்கியுள்ளனர்,’ என குற்றச்சாட்டை கூறினர். மேலும்,  இதற்கு ஆதாரமாக சில புள்ளி விவரங்களையும், ‘ரா’ உளவாளிகள் என கூறப்படும் சிலரின் புகைப்படங்களையும் வெளியிட்டனர்.

இதற்கு இந்தியா நேற்று பதிலடி கொடுத்துள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தானின் குற்றச்சாட்டு வெறும் கட்டுக்கதை. இதை உலக நாடுகள் நம்பாது. பாகிஸ்தானின் தந்திரத்தை சர்வதேச நாடுகள் அறியும். இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் பிரசாரத்தின் வீண் முயற்சிகளில் ஒன்றுதான் இந்த குற்றச்சாட்டு. உலக நாடுகளின் தீவிரவாத முகமான ஒசாமா பின்லேடன் முகம், பாகிஸ்தானில்தான் காணப்பட்டது. அவரை தனது நாட்டு நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர், தியாகி என புகழ்ந்தார். தனது நாட்டில் 40 ஆயிரம் தீவிரவாதிகள் இருப்பதாக ஒப்புக் கொண்டார்.

புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதலை நடத்தி வெற்றிக் கண்டதாக பிரதமர் இம்ரான் கானை புகழ்ந்து பேசியது பாகிஸ்தான் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர்தான். இவை எல்லாவற்றையும் விட, உலகளவில் நடந்த பல தீவிரவாத தாக்குதல்களின் விசாரணை பாகிஸ்தானை நோக்கி நீண்டன என்பதையும் உலகம் அறியும்,’’ என்றார்.

Related Stories:

>