திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகபூஜையுடன் துவங்கியது: 20ம்தேதி சூரசம்ஹாரம்

உடன்குடி: அறுபடை வீடுகளில் 2ம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று  அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 7.30 மணியளவில் அமைச்சர் கடம்பூர்ராஜு, கோயில் இணை ஆணையர் (பொ) கல்யாணி ஆகியோர் யாகசாலை பூஜைகள் நடத்தும் சிவாச்சார்யாரிடம் தாம்பூலம் வழங்கினர். தொடர்ந்து யாகசாலையில் கும்ப பூஜைகள், பூர்ணாகுதியும், தீபாராதனையும் ஜெயந்திநாதருக்கு அபிஷேகமும், அலங்காரமும், நண்பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனையும் யாகசாலையில் மகா தீபாராதனையும் நடந்தது. பின்னர் பகல் 12.45 மணியளவில் மேளதாளங்கள் முழங்க, வேதமந்திரங்கள் ஒலிக்க, சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்தடைந்தார். அங்கு அவருக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.

கொரோனா தொற்று காரணமாக இவ்வருடம் தங்கத்தேர் ஓடாததால் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் சப்பரத்தில் உள்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சிலர் அமர்ந்திருந்து கந்தகஷ்டி கவசம் படித்தனர்.

2 முதல் 5ம்திருநாள் வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடக்கிறது. 6ம் நாளான 20ம்தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும், மற்ற கால பூஜைகளும் நடக்கிறது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் கடற்கரையில் மாலையில் சூரசம்ஹாரம் நடைபெறாது. கோயில் கிரிபிரகார கிழக்கு பகுதியில் ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.7ம்திருநாள் (21ம்தேதி)  நள்ளிரவு சுவாமிக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>