தீபாவளி நாளில் மதுரையில் சோகம் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து தீயணைப்பு முயற்சியில் 2 வீரர்கள் பலி

* கட்டிடம் இடிந்து விழுந்ததில் பரிதாபம்

* அரசு மரியாதையுடன் உடல்கள் அடக்கம்

மதுரை: மதுரை ஜவுளிக்கடையில் நடந்த தீவிபத்தில், தீயை அணைக்கும் பணியின் போது, கட்டிடம் இடிந்து விழுந்து 2 தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை தெற்கு மாசிவீதி, நவபத்கானா தெருவில் பாபுலால் என்பவர், சஞ்சய் டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். தீபாவளிக்கு முன்தினம் நள்ளிரவு வரை கடையில் விற்பனை நடந்தது. பின்னர் பணியாளர்கள் சிலர் கடையில் தங்கியிருந்தனர்.இந்நிலையில், தீபாவளி தினமான நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் கடையில் வைத்திருந்த அட்டைப்பெட்டிகளில் இருந்து குபுகுபுவென புகை வந்து, சிறிது நேரத்தில் பற்றி எரியத்துவங்கின. அங்கிருந்த ஊழியர்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் அதிகம் இருந்ததால், தீ மளமளவென பரவியது. தகவலறிந்து மீனாட்சியம்மன் கோயில்,  நகர் மற்றும் அனுப்பானடி தீயணைப்புத்துறையினர் பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், நிலைய அதிகாரிகள் தலைமையில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஜவுளிக்கடையின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில், தீயணைப்பு வீரர்கள் சிக்கிக் கொண்டனர். மற்ற வீரர்கள் இடிபாடுகளை அகற்றி தீயணைப்பு வீரர்கள் கல்யாண்குமார் (37), சின்னக்கருப்பு (27) ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், இடிபாடுகளுக்குள் தீக்காயங்களுடன் இறந்து கிடந்த நகர் தீயணைப்புத்துறை வீரர் சிவராஜன் (33), மீனாட்சி கோயில் தீயணைப்புத்துறை வீரர் கிருஷ்ணமூர்த்தி (31) ஆகியோர் உடல்கள் மீட்கப்பட்டன.  இதில் சிவராஜன், உசிலம்பட்டி அருகே செக்கானூரணியை சேர்ந்தவர், 2009ல் பணியில் சேர்ந்தார். இவரது மனைவி அங்கையற்கண்ணி (28). 8 வயது மற்றும் 8 மாத ஆண் குழந்தைகள் உள்ளனர்.அரசு மரியாதையுடன் உடல்கள் அடக்கம்:  பிரேத பரிசோதனைக்குப்பின்  குடும்பத்தினரிடம் இருவரது உடல்களும் ஒப்படைக்கப்பட்டது. தீயணைப்புத்துறை இயக்குனர் ஜாபர்சேட்,  தென்மண்டல இணை இயக்குனர் சரவணக்குமார், மாவட்ட அதிகாரி கல்யாண்குமார்,  மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாநகர் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா  மற்றும் தீயணைப்புத்துறை ஊழியர்கள் மலர்  வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சிவராஜனின் உடல் அவரது  சொந்த ஊரான செக்கானூரணியிலும், கிருஷ்ணமூர்த்தியின் உடல் அவரது சொந்த ஊரான  சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்திலும் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம்  செய்யப்பட்டன.

உடனடி ஆய்வு தேவை: பெரும் சோகத்தை ஏற்படுத்திய  இச்சம்பவம் குறித்து, தெற்குவாசல் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகவும், மிகவும் பழமையான  கட்டிடம் என்பதால், வெப்பம் தாளாமல் இடிந்து விழுந்ததாகவும்  தெரியவந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

போலீசார்  கூறுகையில், ` மதுரையில்  பல  கடைகள் பழைய கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.  இவற்றை தீயணைப்புத்துறை  அதிகாரிகள் இன்னொரு சம்பவம்  நடப்பதற்குள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றனர்.

தலா 25 லட்சம் நிவாரண நிதி முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தீயணைப்பு பணியில் பலியான வீரர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரின் கடமை உணர்வையும், தியாகத்தையும் பாராட்டி அவர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், தலா பதினைந்து லட்சம் ரூபாய் அரசு நிதியிலிருந்தும், மொத்தம் 25 லட்சம் ரூபாயும் மற்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த தீயணைப்பாளர்கள் கல்யாணகுமார் மற்றும் சின்னக்கருப்பு ஆகியோருக்கு அரசு நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும். அவர்களுக்கான மருத்துவ செலவை அரசே ஏற்கும் என கூறியுள்ளார்.

பிறந்த நாளில் இறந்த சோகம்

தீவிபத்தில் உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம் இவரது பிறந்தநாள். பிறந்தநாளுக்கு புத்தாடைகள் எடுத்து, குடும்பத்தினர் தயாராக இருந்தனர். கிருஷ்ணமூர்த்தியின் தந்தை பெரியகருப்பன் கூறுகையில், ‘‘எனது மகன் முதலில் காரைக்குடியில் பணியில் இருந்தார். குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே மதுரைக்கு மாறுதலில் வந்தார். அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தோம்’’ என்று கண்ணீர் விட்டு கதறினார்.

 கோடி நிதி வழங்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உயிர்த் தியாகம் செய்துள்ள அந்த இரு வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்து நிர்க்கதியாக நிற்கும் அந்தக் குடும்பங்களை அரசு மீட்க வேண்டும். தீயணைப்பு வீரர்கள் மிகுந்த பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இதுபோன்ற தீயணைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். இரு தீயணைப்பு வீரர்களையும் இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் சக வீரர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Related Stories:

>