×

சென்னையில் விட்டு விட்டு மழை தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள், அணைகள் வேகமாக நிரம்பத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், குமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை உள்ள வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது படிப்படியாக நகர்ந்து, தமிழக கடற்பகுதியை நெருங்கி வருகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று பல இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில், பல இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை கடலோர மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கடலுார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை நேற்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது விட்டு விட்டு பெய்த மழையால் ஈரப்பதம் அதிகரித்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் ஜில்லென்ற சீதோஷ்ணம் நிலவியது. சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் ஓடியது. நேற்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிபட்சமாக பரங்கிப்பேட்டையில் 9செ.மீ., அளவு மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai , Rain left in Chennai It will rain in Tamil Nadu for the next 2 days: Meteorological Department
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...