×

கடற்கரை பகுதியில் விதிமீறல் கட்டிடங்கள் உள்ளதா?..அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: கடற்கரை மேலாண்மை சட்டத்தை மீறி கடற்கரை பகுதியில் கட்டிடங்கள் உள்ளதா என்பது குறித்து, அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டணத்தைச் சேர்ந்த அந்தோணி கன்சோலின், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:- எங்களுக்கு சொந்தமான இடத்தில் மீன்களை சேகரித்து வைப்பதற்கான நிறுவனம் நடத்துகிறேன். வெளிமாநிலத்தவர் இங்கு வந்து மீன்களை வாங்கிச் செல்கின்றனர். இங்கு கட்டிடம் கட்ட பைங்குளம் ஊராட்சி ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே, ஐஸ் பிளாண்ட் கட்டிடத்திற்கு அனுமதி கேட்டு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் விண்ணப்பித்தேன். அவர், மனுவை நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட துணை இயக்குநருக்கு பரிந்துரைத்துள்ளார்.

இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதனிடையே நிறுவனத்திற்கான மின் இணைப்பை ஏன் துண்டிக்க கூடாது எனக்கூறி மின்வாரிய உதவி பொறியாளர் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இந்த நோட்டீசை ரத்து செய்யவும், ஐஸ் பிளாண்ட்டிற்கு அனுமதியும் தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘கடற்கரை மேலாண்மை விதிகள்படி எத்தனை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன? விதிமீறல் கட்டிடங்கள் எத்தனை உள்ளன? இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து, அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.


Tags : buildings ,beach area ,ICC ,government , Are there any illegal buildings in the beach area?
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...