குமரியில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்; படகு சேவை தொடங்காததால் ஏமாற்றம்

குலசேகரம்: குமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று மாத்தூர் தொட்டி பாலம். சிற்றார் அணையில் இருந்து வரும் தண்ணீரை மேற்கு மாவட்ட பகுதி பாசனத்திற்கு கொண்டு செல்ல வெட்டப்பட்ட சிற்றார் பட்டணங்கால்வாய், மாத்தூர் பகுதியில் வரும்போது 2 மலைக்குன்றுகளுக்கு இடையே ஓடும் பரளியாறு குறுக்கிடுகிறது. இதனை கடந்து செல்வதற்கு வசதியாக 2 மலைகுன்றுகளையும் இணைத்து தொட்டி பாலம் அமைக்கப்பட்டது.

இது ஆசியாவிலேயே உயரமானதும், நீளமானதும் ஆகும். இந்த பிரமாண்ட பாலத்தை கண்டுகளிக்கவும், இயற்கை சூழலை ரசிப்பதற்கும் பாறைகளிடையே  தவழ்ந்து வரும் பரளியாற்றின் அழகை ரசிக்கவும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நுழைவு கட்டணம், வாகன பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. அந்த வகையில் மாத்தூர் தொட்டிபாலமும் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்  நேற்று தீபாவளி விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் மாத்தூர் தொட்டிபாலத்தில் குவிந்தனர். வழக்கத்தை விட காலை முதலே கூட்டம் அலைமோதியது. இதனால் பார்க்கிங் பகுதியில் கடும் வாகன நெருக்கடி ஏற்பட்டது. எங்கு மனித தலைகளாக காணப்பட்டது. தற்போது திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதியில்லாததால் தொட்டி பாலம்  வந்த சுற்றுலா பயணிகள், சிற்றார் பட்டணங்கால்வாய் மற்றும் பாலத்தின் அடிப்பகுதியில் செல்லும் பரளியாற்றில் கூட்டம் கூட்டமாக நீராடி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஏராளமான நடை பாதை வியாபாரிகள் மற்றும் புதிது புதிதாக கடைகளும் முளைத்து வியாபாரம் சூடுபிடித்தது.

திற்பரப்பு

இதேபோன்று திற்பரப்பு அருவியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அருவியின் மேல் பகுதியில் உள்ள திற்பரப்பு தடுப்பணையில் மறுகால் பாயும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் வாகன நிறுத்தும் பகுதியில் கடும்  நெருக்கடி ஏற்பட்டது.

கன்னியாகுமரி

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் திரிவேணி சங்கமம் கடற்கரையில் குடும்பமாக குளித்து மகிழ்ந்தனர். இது தவிர கடற்கரை பகுதியில் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். முதல்வர் அறிவிப்புக்கு பிறகும் கன்னியாகுமரியில் படகு சேவை தொடங்கவில்லை. இதனால் நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்த ஆயிர கணக்கான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories:

>