×

சோழவந்தான் அருகே குருவித்துறை கோயிலில் இன்று குருபெயர்ச்சி விழா; சிறப்பு பஸ்கள் இயக்கம்

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குருவித்துறையில் குருபெயர்ச்சி விழா இன்று இரவு நடைபெற உள்ளது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சோழவந்தான் அருகே குருவித்துறையில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ தேவி பூதேவி சமேத சித்திர ரத வல்லபபெருமாள் கோயில் எதிரே உள்ள தனி சன்னதியில் சக்கரத்தாழ்வாருடன் சுயம்பு குருபகவான் பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இங்கு ஆண்டு தோறும் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு விழா கடந்த 13ம் தேதி லட்சார்ச்சனையுடன் துவங்கியது.

முக்கிய நிகழ்வாக   இன்று இரவு 7.48 மணியளவில் பட்டர்கள் ரெங்கநாதன், ஸ்ரீதர், சடகோபர், ராஜா உள்ளிட்டோரால் பரிகார மகாயாகம் நடைபெற உள்ளது. இதில் பரிகாரம் செய்ய வேண்டிய மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் தங்கள் பெயர், ராசி, நட்சத்திரங்களுக்கு பரிகார பூஜைகள் செய்து கொள்ளலாம். பின்னர் யாகசாலையிலிருந்து புனித நீர் கலசங்களை கொண்டு செல்லும் பட்டர்கள், இரவு 9.48 மணியளவில் மூலவர் குருபகவான் மற்றும் சக்கரத்தாழ்வார்க்கு புனித நீர் ஊற்றி, சிறப்பு அபிஷேகங்கள், திருமஞ்சன பூஜைகள் நடத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு குருபகவான் தனுசு ராசியிலிருந்து, மகரம்  ராசிக்கு பெயர்ச்சியாவார். சமயநல்லூர் டி.எஸ்.பி ஆனந்த் ஆரோக்கியராஜ், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்ட 100 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

வாடிப்பட்டி தாசில்தார் பழனிக்குமார் உள்ளிட்ட  வருவாய் துறையினரும், சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துள்ளனர். மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெண்மணி, செயல் அலுவலர் சுரேஷ் கண்ணன், கணக்கர் வெங்கடேசன் மற்றும் கிருஷ்ணன், நாகராஜ், மணி உள்ளிட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலால் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : ceremony ,Gurupeyarchi ,Kuruvithurai temple ,Cholavanthan , Guru Peerachchi ceremony at Kuruvithurai temple near Cholavanthan today; Movement of special buses
× RELATED அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா