திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது; தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

உடன்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை (ஞாயிறு) யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

அறுபடை வீடுகளில் 2ம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா கொரோனா தொற்று நோயின் தாக்கத்தையொட்டி பல்வேறு கட்டுப்பாட்டுகளுடன் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கட்டுபாடுகளுடன் (இன்று) 15ம்தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.

காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. 2ம்திருநாள் முதல் 5ம் திருநாள் வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடக்கிறது. 1ம் திருநாள் முதல் 5ம் திருநாள் வரை யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயநாதருக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. பகல் 12 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் தங்கசப்பரத்தில் கோயில் உள்பிரகாரத்தில் உள்ள 108மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. மாலை 4மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாள்களுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்கராமாகி தீபாராதனை நடக்கிறது.

கொரோனா தொற்று நோயின் காரணமாக இந்த வருடம் தங்கத்தேர் ஓடாத காரணத்தினால் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 6ம்திருநாளான்று (20ம்தேதி) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடக்கிறது. யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் அலங்காரமாகி, பின்னர் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளுகிறார். அங்கு மகா தீபாராதனை நடக்கிறது. மதியம் 1.30 மணிக்கு சுவாமி, அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, வள்ளி, தெய்வானை அம்பாளுடன் திருவாடுதுறை கந்த சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. கொரோனா தொற்று நோயின் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறாது என்பதால் கோயில் கிரிபிரகார கிழக்கு பகுதியில் சுவாமி ஜெயந்தி நாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 7ம்திருநாள் அதிகாலை தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்காக கோயில் உள்பிரகாரத்தில் உள்ள 108மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளுகிறார். பின்னர் அன்று நள்ளிரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நாட்களை தவிர மற்ற நாட்களில் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். இதில் 50 சதவீதம் ஆன்லைன் பதிவு செய்தவர்களையும், 50 சதவீதம் நேரில் வருபவர்களும் அனுமதிக்கப்படுவர். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படும். இதைப்போல் முருக னின் மற்ற அறுபடை வீடு கள் உள்பட அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று கந்தசஷ்டி விழா துவங்கியது.

Related Stories:

>