×

மதுரை ஜவுளிக்கடையில் பயங்கர தீ; கட்டிடம் இடிந்து 2 தீயணைப்பு வீரர்கள் பலி; அரசு மரியாதையுடன் உடல்கள் அடக்கம்

மதுரை: மதுரை ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியின் போது, கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று முன்தினம் முழுவதும் மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள விளக்குத்தூண் பகுதியில் ஜவுளிகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பல்வேறு பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். மாசி வீதி, நவபத்கானா தெருவில் பாபுலால் என்பவர், ‘சஞ்சய் டெக்ஸ்டைல்ஸ்’ என்ற பெயரில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இங்கு, மொத்த மற்றும் சில்லரை ஜவுளி விற்பனை நடந்து வந்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவு வரை கடையில் விற்பனை நடந்தது. பின்னர் பணியாளர்கள் சிலர் கடையில் தங்கியிருந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் கடையில் வைத்திருந்த அட்டைப் பெட்டிகளில் இருந்து குபுகுபுவென புகை வந்தது. தொடர்ந்து அட்டைப்பெட்டிகள் பற்றி எரியத் துவங்கின. கடையில் தங்கியிருந்த ஊழியர்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், கடை முழுவதும் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் அதிகம் இருந்ததால், தீ மளமளவென பரவியது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்புத் துறையினரும், நகர் மற்றும் அனுப்பானடி தீயணைப்புத் துறையினர் 10க்கும் மேற்பட்ட வீரர்கள் நிலைய அதிகாரிகள் தலைமையில், கடைக்கு வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜவுளிக்கடையின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில், தீயணைப்பு வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பின்னர், இடிபாடுகளை அகற்றி தீயணைப்பு வீரர்கள் கல்யாண்குமார்(37), சின்னக்கருப்பு(27) ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இடிபாடுகளை அகற்றிய போது நகர் தீயணைப்புத் துறை வீரர் சிவராஜன்(33), மீனாட்சி கோயில் தீயணைப்புத் துறை வீரர் கிருஷ்ணமூர்த்தி(31) ஆகியோர் தீக்காயங்களுடன் கட்டிடத்தின் உள்ளே இறந்து கிடந்தனர். அவர்கள் இறந்து கிடந்ததை கண்ட சகவீரர்கள் கதறி துடித்தனர். பின்னர் அவர்களது உடல்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று காலை சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தீயணைப்புத்துறை இயக்குனர் ஜாபர்சேட் தென்மண்டல இணை இயக்குனர் சரவணக்குமார், மாவட்ட அதிகாரி கல்யாண்குமார், மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாநகர் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் தீயணைப்புத் துறை ஊழியர்கள் வீர மரணமடைந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சிவராஜனின் உடல் அவரது சொந்த ஊரான செக்கானுரணிக்கும், கிருஷ்ணமூர்த்தியின் உடல் அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன.
அங்கு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இந்த விபத்தில் உயிரிழந்த உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணியை சேர்ந்த சிவராஜன், கடந்த 2009ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவரது மனைவி அங்கையற்கண்ணி(28). இவர்களுக்கு ஹர்ஷன்(8), தன்வீன் (8 மாதம்) என 2 மகன்கள் உள்ளனர்.

பிறந்த நாளில் இறந்த பரிதாபம்

கிருஷ்ணமூர்த்தி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்தவர். நேற்று இவரது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாளுக்கு புத்தாடைகள் எடுத்து, குடும்பத்தினர் தயாராக இருந்தனர். கிருஷ்ணமூர்த்தியின் தந்தை பெரியகருப்பன் கூறுகையில், ‘எனது மகன் முதலில் காரைக்குடியில் பணியில் இருந்தார். குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் என்பதற்காக மதுரைக்கு பணி மாறுதலில் வந்தார். தற்போது அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தோம். இந்நிலையில் அவரது மரணம் எங்கள் குடும்பத்திற்கு பேரிழப்பாக அமைந்து விட்டது’ என்று கண்ணீர் விட்டு கதறினார்.



Tags : textile shop ,firefighters ,Building collapse ,Madurai ,Burial , Terrible fire at Madurai textile shop; Building collapse kills 2 firefighters; Burial of bodies with state honors
× RELATED காற்று மாசு, ஒலிமாசு ஏற்படுத்துவதாக...