×

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது பகிரங்க ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யாமல் இருப்பது ஏன்?: ஸ்டாலின் கேள்வி

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது பகிரங்க ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தமிழக அரசு அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யாமல் இருப்பது ஏன்? திரைமறைவுப் பேரம் என்ன? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சூரப்பாவை உடனடியாக தற்காலிகப் பணிநீக்கம் செய்து, ஊழல் புகார் தொடர்பான ஆவணங்களையும் விசாரணை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் திரு. சூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் அந்தத் துணை வேந்தர், எந்தவித உறுத்தலும் இன்றி, பதவியில் தொடருவது கேலிக்கூத்தாக இருக்கிறது. ஒருவேளை, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு முறை அல்ல பல முறை ஆளான போதும், வழக்குகள் விசாரணைகள் நடைபெறும் போதும் முதலமைச்சரும், அமைச்சர்களும் பதவிகளில் தொடர்ந்து இருந்துவரும் போது, நமக்கு மட்டும் என்ன என்ற எண்ணம் காரணமாக இருக்குமோ என்று மாணவர்கள் மத்தியில் கருத்து ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது.  

சூரப்பா மீது பிப்ரவரி மாதத்தில் வந்த புகாரை 9 மாதங்களுக்கு மேல் ஏன் நிலுவையில் வைத்திருந்ததது அ.தி.மு.க. அரசு?. இந்த 9 மாதங்கள் இரு தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற பேரம் என்ன? என்பது தனி விசாரணைக்குட்பட்டது என்றாலும்; இப்போது ஊழல் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், துணை வேந்தரைப் பதவியில் நீடிக்க அனுமதித்திருப்பது, ஒரு கண்துடைப்பு நாடகமே என்று பலரும் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். 280 கோடி ரூபாய் ஊழல் புகார்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ள உயர்கல்வித்துறையின் அரசு ஆணையில், தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் 80 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளது என்று துணை வேந்தர் சூரப்பா மீதும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள துணை இயக்குநர் சக்திநாதன் மீதும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லஞ்சப்பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அரசுக்குத் தெரிந்த பிறகும் முதலமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் அந்த இருவரையும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யாமல் பாதுகாப்பது ஏன்? 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை இடைக்காலப் பணி நீக்கம் செய்து ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போல் விளம்பரப்படுத்திக் கொள்ளும் அ.தி.மு.க. அரசு,  80 கோடி ரூபாய் லஞ்சம் வசூல் செய்து விட்டார்கள் என்று அரசு ஆணையில்  குற்றம் சாட்டியும் - இதுநாள் வரை துணைவேந்தரையும், துணை இயக்குநரையும் சஸ்பெண்ட் செய்யாமல் இருப்பது திரைமறைவில் என்ன பேரம் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை அனைவரது மனங்களிலும்  எழுப்பியுள்ளது.

கடந்த காலங்களில் இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த போது, தி.மு.க. ஆட்சியில் கோவை அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதே போல் அ.தி.மு.க. ஆட்சியின் போது அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் மன்னர் ஜவஹர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இப்போது இவ்வளவு கடுமையான  ஊழல் புகாரில்,  துணை வேந்தராக இருக்கும் திரு. சூரப்பாவிற்கு மட்டும் ஏன் விதி விலக்கு?  குறிப்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. கலையரசன் விசாரணை ஆணையம் நாளைய தினம் தனது விசாரணையைத் துவக்கப் போகிறது என்று செய்திகள் வரும் நிலையில் - மனசாட்சியை உலுக்கும் ஊழல் புகார்களுக்கு உள்ளான துணை வேந்தரை உடனடியாக சஸ்பென்ட் செய்வதுதான் நேர்மையான நியாயமான விசாரணைக்கு வழி விடும்.

ஆகவே அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் திரு. சூரப்பாவை இனியும் காலதாமதம் இன்றி உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். அது மட்டுமின்றி - ஊழல் புகார்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும்  அழிக்கப்பட்டுவிடாமல் இருக்க உடனடியாக அவை அனைத்தையும்  விசாரணை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று பத்திரிகைத் துறை சொல்லப்படுகிறது. பலநேரங்களில் மொத்த ஜனநாயகத்தையும் காக்கும் பெரும் பொறுப்பும் பத்திரிகைத் துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும்தான் இருக்கிறது. மக்களுக்கு மட்டுமே உண்மையாக இருக்கும் பெருங்கடமை பத்திரிகையாளர்களுக்கு உண்டு. அத்தகைய பத்திரிகையாளர் தினமாக இந்திய அளவில் நவம்பர் 16 ஆம் நாள், ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட இந்த நாளை, 1996 ஆம் ஆண்டு முதல் தேசியப் பத்திரிகையாளர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

ஜனநாயகம், சமத்துவம், சமூகநீதி, மதநல்லிணக்கம், ஏழை நடுத்தர வர்க்க மக்கள் நலன் ஆகியவை எதேச்சதிகார மனம் கொண்டவர்களால் எள்ளிநகையாடப்படும் இந்தச் சூழலில் இவற்றுக்காகப் போராட, வாதாட, எழுத, எழுதியபடி நிற்க வேண்டிய பெரும் பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு உண்டு. அதனை எந்த சமரசங்களுக்கும் இடமளிக்காத வகையில் பத்திரிகையாளர்கள் காக்க வேண்டும் என்று இந்தநாளில் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வாழ்வில் உலக வாழ்வு அடங்கி இருக்கிறது. உங்களது வெற்றியில் உலக வெற்றி உள்ளடங்கி இருக்கிறது. எனவே, உங்களது வாழ்க்கையே பொதுவாழ்க்கைதான். அத்தகைய பொதுவாழ்க்கைக்கு வந்த பத்திரிகையாளர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்தான் என கூறினார். பத்திரிகையாளர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவன ஊழியர்கள், அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Surappa ,Anna University ,Stalin , Anna University, Surappa, Temporary, Dismissal, Stalin
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...