லெவல்கிராசிங் இல்லாத வழித்தடமாக விரைவில் மாறுகிறது மத்திய ரயில்வேயின் மெயின் லைன்

மும்பை : லெவல் கிராசிங் இல்லாத வழித்தடமாக விரைவில் மாறுகிறது மத்திய ரயில்வேயின் மெயின் லைன். மத்திய ரயில்வே வழித்தடத்தில் கல்வா, திவா, அம்பிவலி ஆகிய லெவல்கிராசிங்குகள் உள்ளன. இந்த வழித்தடங்கள் வழியாக தினமும் 55 ரயில்கள் சென்று வருகின்றன. தினசரி 15 முதல் 20 முறை இந்த லெவல் கிராசிங்குகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் ரயில்கள் 5 நிமிடத்துக்கு மேலாக நிறுத்திவைக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த லெவல் கிராசிங் மேல் பாலம் அமைக்கும் பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த பணி தாமதம் ஆவதற்கு மாநகராட்சியின் குளறுபடிகளே காரணம் என கூறப்பட்டுவருகிறது. ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற பாலம் கட்டும் பணி நிறைவடைந்து பல ஆண்டுகளாக ஆகிவிட்டன. ஆனால்  உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான பகுதியில் கட்டுமான பணி தொடங்கப்படாமல்  நிலுவையில் உள்ளது. அதாவது கல்வா மற்றும் திவா பகுதியில் கட்டுமான பணி தாமதத்துக்கு தானே மாநகராட்சியும், அம்பிவிலி பகுதியில் கட்டுமான பணி தாமதத்துக்கு கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சியும் காரணம் என தெரியவந்துள்ளது. நிலப்பிரச்னை மற்றும் அது தொடர்பாக வழக்குகளே இந்த பாலம் கட்டுமான பணி தாமதத்துக்கு காரணமாக கூறப்பட்டது.

அம்பிவிலி

அம்பிவிலியில் 800 மீட்டர் நீளத்துக்கு நடைபெறும் பாலம் கட்டுமான பணிக்காக மெயின் லைன் வழியாக 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாலம் கட்டும்பணி நிறைவடைந்துள்ளது. கல்யாண்- கசாரா வழித்தடத்தில் உள்ள லெவல் கிராசிங் காரணமாக ரயில்கள் தாமதமாக சென்றுவருகின்றன. இதனால் இந்த லெவல் கிராசிங் விரைவில் மூடப்படும். கடந்த 2010-11 ல் பாலம் கட்டுமான பணி தொடங்கியபோது அம்பிவிலி பாலம் ரூ.17.10 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டது. இந்த பகுதியில் ரயில்வே கட்டவேண்டிய பகுதி கடந்த 2015ம் ஆண்டிலேயே கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கல்யாண் மாநகராட்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை மற்றும் அது தொடர்பான சட்ட சிக்கல்களால் இந்த பணியை முடிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்த பகுதியில் உள்ள லெவல் கிராசிங்குகள் 30 நிமிடத்துக்கு ஒருமுறை திறக்கப்படுவதால் தினமும் 10 ரயில்கள் 5 நிமிடங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்படும் நிலை உள்ளது.

இந்த நிலையில் விரைவில் இந்த பகுதி லெவல் கிராசிங் இல்லாத பகுதியாக மாறும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி இன்ஜினியர் கூறியதாவது: தற்போது நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிட்டன.இதனால் வரும் ஜனவரி இறுதியில் இந்த பாலம் கட்டுமான பணி நிறைவடையும். வரும் புத்தாண்டுபரிசாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த பாலம் திறக்கப்படும்.

திவா பாலம்

இதேபோல் திவா பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலமும் கிழக்கு பகுதியில் போதுமான நிலம் கிடைக்காததால் தாமதம் ஏற்பட்டது. இதனால் 6 வழித்தடங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.இந்த நிலையில் தானே மாநகராட்சி அலுவலர்கள் கடந்த மாதம் அந்த பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கிழக்கு பகுதியில் இருந்த குளத்தில் ஏராளமான பல்வேறு இடங்களில் அகற்றப்பட்ட மின்கம்பங்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன.

இது தவிர ஏராளமான கருவிகளும் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அவற்றை அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கும். மேற்கு பகுதியில் பொருட்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் இந்த பாலம் திறக்கப்படும் என மத்திய ரயில்வே செய்தி தொடர்பாளர் சிவாஜி சுதார் தெரிவித்தார்.

Related Stories:

>