×

சகோதரிக்கு சாப்பாடு வாங்கச் சென்ற இரட்டையர்கள் குளத்தில் மூழ்கி பலி

ஓட்டப்பிடாரம் :  தூத்துக்குடி மாவட்டம், புதியபுத்தூர் அருகே மேல அரசரடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பூரணம். தம்பதிக்கு மகேஸ்வரி (14), அருண் சுரேஷ் (12), அருண் வெங்கடேஷ் (12) என 3 குழந்தைகள். இவர்களில் அருண் சுரேசும், வெங்கடேசும் இரட்டையர்கள் ஆவர். அப்பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தனர். தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சிறிய அளவிலான ஓட்டல் நடத்தி வந்த செல்வராஜ், குடும்ப பிரச்னையால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அவரது மனைவி பூரணம் அந்த உணவகத்தை நடத்தி வருகிறார். இதனால் தினமும் கடையில் இருந்தே குழந்தைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான உணவு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

சகோதரர்களான அருண் சுரேஷ், அருண் வெங்கடேஷ் இருவரும், நேற்று முன்தினம் மதியம் கடையில் உணவருந்தி விட்டு தங்களது சகோதரி மகேஸ்வரிக்கான உணவை பார்சல் கட்டிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆனால், வெகுநேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் வீடு  உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் இருவரை பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த புதியம்புத்தூர்  போலீசார், மாயமான இரட்டையர்களை தேடி வந்தனர்.

 இந்நிலையில், மாயமான இவர்கள் இருவரும் ஊருக்கு அருகேயுள்ள குளத்தில் சடலமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது. குளக்கரையில் மகேஸ்வரிக்காக சிறுவர்கள் வாங்கி வந்த உணவு பொட்டலத்தையும்,  தண்ணீரில் மிதந்த இரட்டை சிறுவர்களின் சடலத்தையும் கண்ட  தாய் பூரணம்,  சகோதரி மகேஸ்வரி உள்ளிட்ட ஊர் மக்கள் கதறி அழுதனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே தகவலறிந்து விரைந்து வந்த தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் கூறுகையில், ‘‘நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்த சிறுவர்கள், தங்களது அக்கா மகேஸ்வரிக்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்புகையில் சமீபத்தில் பெய்த மழையில் ஊரணியில் தேங்கிக் கிடந்த தண்ணீரை கண்டு, அதில் குளிக்க ஆசைப்பட்டனர்.  இவ்வாறு ஊரணியில் குளித்த போது ஆழமான பகுதியில் வண்டல் மண் கலந்த  நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரனையில் தெரியவருகிறது. இருப்பினும் இச்ச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.

இப்போது பருவ மழை காலம். பல குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் மழை தண்ணீர் அதில் தேங்கி நிற்கும். அதில் ஆழம் எவ்வளவு என்பது சிறுவர்களுக்கு தெரியாது. பெற்றோரின் கண்காணிப்பில் மட்டுமே சிறுவர்கள் குளம் மற்றும் கண்மாய்களுக்கு குளிக்க அழைத்து செல்ல வேண்டும், இது போன்று குழந்தைகளை தனியாக அனுப்புவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும்’ என்றார்.


Tags : twins ,sister ,pool , Thoothukudi,Twins Dead,ottapidaram
× RELATED ஏமாற்றுவதில் இது புது விதம்டா சாமி…...