ஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடக்கம்

*டாப் 8 வீரர்கள் பங்கேற்பு

லண்டன் : ஏடிபி டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மோதும் ஏடிபி டூர் பைனல்ஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் டென்னிஸ் சீசனின் முடிவில், தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி டூர் பைனல்ஸ் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்க தகுதி பெறுவதே டென்னிஸ் வீரர்களுக்கு மிகவும் பெருமையான விஷயமாக இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு பல தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்தாகியும் உள்ள நிலையில் டூர் பைனல்ஸ் திட்டமிட்டபடி நடத்தப்படுகிறது. இது 50வது ஆண்டு பொன் விழா தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1970ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த முதல் ஏடிபி பைனல்ஸ் தொடரில் ஸ்டான் ஸ்மித் சாம்பியன் பட்டம் வென்றார். லண்டனில் 12வது மற்றும் கடைசி முறையாக நடத்தப்பட உள்ள இந்த தொடர், அடுத்த ஆண்டு இத்தாலியின் டுரின் நகருக்கு மாற்றப்படுகிறது. லண்டன் O2 அரங்கில் இன்று தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற உள்ள போட்டியில் முன்னணி வீரர்கள் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), ரபேல் நடால் (ஸ்பெயின்) உட்பட மொத்தம் 8 வீரர்கள் சாம்பியன் பட்டம் வெல்ல வரிந்துகட்டுகின்றனர். தலா 4 பேர் கொண்ட இரண்டு பிரிவுகளில் லீக் சுற்று நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் அரை இறுதியில் மோத உள்ளனர். இறுதிப் போட்டி 22ம் தேதி நடைபெற உள்ளது.

டோக்கியோ 1970 பிரிவில் ஜோகோவிச் (செர்பியா), டானில் மெட்வதேவ் (ரஷ்யா), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), டீகோ ஷ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். லண்டன் 2020 பிரிவில் நடால் (ஸ்பெயின்), டொமினிக் தீம் (ஆஸ்திரியா), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா) ஆகியோர் களமிறங்குகின்றனர். பெடரர் இல்லை: நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் (சுவிஸ்) தரவரிசையில் 5வது இடத்தைப் பிடித்திருந்தாலும், முழங்கால் மூட்டு காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடவில்லை. இதனால் 9வது இடத்தில் இருந்த டீகோ ஷ்வார்ட்ஸ்மேனுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடும் போட்டி: ஜோகோவிச், நடால் தவிர்த்து மற்றவர்கள் இளம் வீரர்கள் என்பதால் இம்முறை பட்டம் வெல்ல கடும் போட்டி நிலவுகிறது. சிட்சிபாஸ் 2019ம் ஆண்டிலும், அலெக்சாண்டர் 2018லும் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு யுஎஸ் ஓபனில் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற டொமினிக் தீமும் டூர் பைனல்ஸ் கோப்பையை கைப்பற்ற வரிந்துகட்டுகிறார்.

நடால் தொடர்ந்து 16வது ஆண்டாக இந்த தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளார். அவர் இந்த தொடரில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஜோகோவிச் 13வது முறையாக தகுதி பெற்றுள்ளதுடன், ஏற்கனவே 5 முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார் (2008, 2012-15). ருப்லேவ், ஷ்வார்ட்ஸ்மேன் முதல் முறையாக இத்தொடரில் விளையாட உள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவு தரவரிசையில் டாப்-8 ஜோடிகளும் சாம்பியன் பட்டம் வெல்ல களமிறங்குவது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இம்முறை ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Related Stories:

>