மலைகிராமங்களில் வலைவிரிக்கும் புரோக்கர்கள் செம்மரக்கடத்தல் கும்பலிடம் சிக்கி சீரழியும் பழங்குடி மக்கள்

சேலம் : பழங்குடியின மக்கள் மீது அரசு தொடர்ந்து பாராமுகம் காட்டுவதால், அவர்கள் செம்மரக்கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு திசைமாறிச் செல்லும் அவலம் தொடர்வதாக மேம்பாட்டு நல அமைப்புகள் தெரிவித்துள்ளது.   தமிழகத்தின் பூர்வகுடிகளாக கருதப்படும் பழங்குடியின மக்கள் தமிழகத்தின் மலைப்பகுதிகளில் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலை, விழுப்புரம் மாவட்டத்தின் பெரியகல்ராயன், சின்னகல்ராயன் மலைகள், சேலம் மாவட்டத்தின் சேர்வராயன்மலை, பச்சைமலை, பாலமலை, நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை, தர்மபுரி மாவட்டத்தின் சித்தேரி மலை, வத்தல்மலை என்று இவர்களின் வாழ்விடங்கள் நீண்டு கொண்டே போகிறது. நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்த நிலையில் இவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதா? என்றால் அதற்கான விடை கேள்விக்குறிதான்.

அதே நேரத்தில் சமீபகாலமாக இவர்களுக்கு நேரும் அவலங்களும், திசை மாறிச் செல்லும் பயணமும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டச்சென்ற 27பேர், அம்மாநில வனத்துறையினரின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள், ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவர முடியாமல் சிறைகளில் அடைபட்டுக்கிடக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஆந்திர மாநிலம் கடப்பா விமான நிலையம் அருகே வேன் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உடல் கருகி பலியாகினர். செம்மரம் கடத்திவரப்பட்ட அந்த வேனில் இருந்தவர்கள் சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்ற தகவல் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. பழங்குடியின மக்கள் மீது அரசு காட்டும் பாராமுகமே இது போன்ற அவலங்களுக்கு முக்கிய காரணம் என்று மேம்பாட்டு அமைப்புகள்  தெரிவித்துள்ளது.

இது குறித்து பழங்குடியின மக்கள் நலமேம்பாட்டு அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த சில  ஆண்டுகளாக செம்மரக்கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு உயிரிழப்பவர்களும், கைது செய்யப்படுபவர்களும் பழங்குடியின மக்களாக  இருப்பதும், இவர்களில் பெரும்பாலானவர்கள் படித்தவர்களாக இருப்பதும் அதிர்ச்சிகரமானது. மலை கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக கல்வி கற்க வேண்டும்.

அப்படி கற்றால் அரசிடம் இருந்து நமக்கு உதவிகள் கிடைக்கும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

இதன் காரணமான பொறியியல், ஆசிரியர் பயிற்சி போன்ற படிப்பு முடித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பில் எஸ்டி மக்களுக்கு மத்திய அரசு 7 சதவீத இட ஒதுக்கீடும், தமிழக அரசு ஒரு சதவீத இட ஒதுக்கீடும் அறிவித்துள்ளது. ஆனால் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பது கேள்விக்குறி தான். இதனால் சொந்த கிராமத்தில் உள்ள சிறிய நிலத்தில் விவசாயம் செய்து, வறுமையோடு போராடுகிறார்கள்.

இப்படிப்பட்ட இளைஞர்களை குறிவைத்து ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த புரோக்கர் கும்பல் ஒன்று சுற்றுகிறது. அவர்கள், கை நிறைய சம்பளம் என்று கூறி, இளைஞர்களை மட்டுமல்லாமல் குடும்பத்தையும் மூளைச்சலவை செய்கின்றனர்.

 என்ன வேலைக்கு செல்கிறோம் என்று தெரியாமலேயே சென்று, சமூக விரோத செயல்களுக்கு ஆட்படுகின்றனர். இந்த அவலத்தை போக்க உழைக்கும் திறன் மிக்க, சிறந்த மனித வளமாக திகழும் மலைவாழ் இளைஞர்களை, முறையாக பயன்படுத்திக்கொள்ளவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தமிழக அரசு அக்கரை செலுத்தவேண்டும்.  ஒரு சதவீத வாக்குவங்கி மட்டுமே உள்ளதால் இவர்களை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டு கொள்ளாமல் புறக்கணித்து வருகிறது. இதனால் அவர்களின் கோரிக்கைகள் வலுப்பெற வாய்ப்புகள் இல்லாமல் போவது வேதனைக்குரியது. இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

பலகோடிகள் ஒதுக்கினாலும் முறையாக செலவிடுவதில்லை

‘‘ஜவ்வாதுமலை, வத்தல்மலை, சித்தேரி மலையில் இயற்கை வளத்தை பயன்படுத்தி சிறு தொழில்கள் தொடங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. ஆனால் இதுவரை இந்த கோரிக்கை நிறைவேறவில்லை. மேலும், தேன், தினை, வரகு, சாமை, புளி போன்ற வன வளங்களை முறையாக பயன்படுத்தி, சந்தை படுத்துவதற்கான வாய்ப்புகளையும் அரசு உருவாக்கித்தரவில்லை. தாட்கோ, புதுவாழ்வு திட்டம், மாவட்ட தொழில் மையம் போன்றவற்றின் மூலம் மலைவாழ் இளைஞர்களுக்கு சுய தொழில் கடன் வழங்க முன்னுரிமை வழங்குவதில்லை.மலைவாழ் மக்களின் மறுவாழ்வுக்காக, பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனாலும், அவை முறையாக மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்காக செலவிடப்படுவதில்லை,’’ என்பதும் மக்களின் குமுறல்.

Related Stories:

>