×

பறவைகளுக்காக தீபாவளி பட்டாசு வெடிக்காத கிராமம்

நாகை : பறவைகளுக்காக தீபாவளி பட்டாசு வெடிக்காத கிராமமாக பெரம்பூர் இருந்து வருகிறது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமத்தில் தெரு ஓரத்தில் உள்ள புளியமரம், வேப்பமரம் ஆகிய மரங்களில் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து கொண்டு மீண்டும் தான் வந்த இடத்திற்கே சென்று விடுகின்றன. வருடம் தோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்களில் வெளியூர்களில் இருந்தும் மற்றும் ஆஸ்திரேலியா பகுதியிலிருந்தும் பல வகையான பறவைகள் வந்து பெரம்பூரில் தங்கி கூடுகட்டி வாழ்கின்றன. ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் பறவைகள் கூழகடாய் நீர்காகம், மடையான் உள்ளிட்ட 50 வகையான பறவைகள் இங்கு வருகின்றன.

இவைகளில் சில பறவைகள் கூடு கட்டிக்கொண்டு முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்தவுடன் ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ச்சி அடைந்தவுடன் தாயுடன் சேர்ந்து தாயகத்திற்கு திரும்பி விடுகின்றன. இது வருடம் தோறும் நடந்து வருகிறது. ஆனால் சில வகையான பறவைகள் மழைக்காலம் வருவதற்கு முன்பே பறந்து சென்று விடுகின்றன. சில வகையான பறவைகள் மட்டும் இங்கேயே தங்கி விடுகின்றன. வருடந்தோரும் பறவைகளின் நலன் கருதி தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில்லை. கிராம மக்கள் மிகவும் விழிப்புடன் இருந்து இந்த வகையான பறவைகளை பாதுகாத்து வருகின்றனர்.

இதுகுறித்து பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் கூறுகையில், பெரம்பூர் கிராமத்தில் உள்ள பறவைகளை பத்திரமாக பாதுகாத்து வருகின்றோம். பறவைகளின் நலன்கருதி இந்த கிராமத்தில் யாரும் பட்டாசு வெடிக்க கூடாது என்று கிராமத்து மக்கள் சார்பில் முடிவு செய்துள்ளோம். அதன்படி ஒவ்வொரு தீபாவளி அன்றும் இந்த கிராமத்தில் பட்டாசு வெடிப்பது கிடையாது. இதேபோல் இந்த கிராமத்தில் உள்ள ஒரு ஆலமரத்தில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்கியுள்ளன. அதனையும் பத்திரமாக பாதுகாத்து வருகிறோம்.

பெரம்பூர் கிராமத்தில் பறவைகளை முழுமையாக பாதுகாக்கும் வகையிலும், வவ்வால்களை பாதுகாக்கும் வகையிலும் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவும் பெரம்பூர் கிராமத்தை ஒரு சுற்றுலா பகுதியாக மாற்றி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Deepavali Fireworks Village , Nagapattinam,Deepavali, Fire cracker, Birds
× RELATED கொள்ளிடம் அருகே பறவைகளுக்காக தீபாவளி பட்டாசு வெடிக்காத கிராமம்