தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காளைகள் மோதும் போட்டி

*வடகர்நாடக பகுதியில் வினோதம்

பெங்களூரு : வடகர்நாடக பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காளைகள் மோதும் போட்டி நடத்துவது காலம் காலமாக நடந்து வருகிறது. உழவு பணியில் விவசாயிகளுடன் சமமாக உழைப்பது காளைகள். அதை மகிழ்விக்கும் நோக்கத்தில் பொங்கல், யுகாதி போன்ற பண்டிகை காலங்களில் பசு, காளைகளுக்கு பூஜைகள் நடத்தி நன்றி தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு, காளை வெள்ளோட்டம். மஞ்சு விரட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் கம்பளா என்ற பெயரில் காளை மற்றும் எருமைகள் ஓட்டம் நடத்தப்படுகிறது. கர்நாடகாவில் முக்கியமான கோயில் திருவிழாக்களில் சேற்றில் காளைகளுக்கு ஓட்ட பந்தயம் நடக்கிறது.

இந்நிலையில் வடகர்நாடக பகுதியில் உள்ள ஹுப்பள்ளி-தார்வார் மாவட்டங்களில் சில கிராமங்களில் தீபாவளி பண்டிகையின் போது காளைகள் சண்டை போட்டி நடத்தப்படுகிறது. பொதுவாக சேவல் சண்டை,  வெள்ளாட்டு சண்டை, செம்மறி ஆடுகள் சண்டை போட்டிகள் நடத்தப்படுகிறது. காளைகள் சண்டை போட்டி நடத்தியதாக தெரியவில்லை. ஆனால் 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஹுப்பள்ளி மாவட்டத்தில் காளைகள் சண்டை போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியில் பல காளை ஜோடிகள் பங்கேற்றுள்ளது.

தார்வார் தாலுகாவில் உள்ள மனகுண்டி, மனசூரு, பாடா, தேவரஹள்ளி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இப்போட்டி நடந்து வருவதாக மனசூரு கிராமத்தை சேர்ந்த சிவானந்தா ஆகாரா என்ற முதியவர் தெரிவிக்கிறார். தீபாவளியை முன்னிட்டு மேற்கண்ட கிராமங்களில் நேற்று காளைகள் சண்டை போட்டி நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கினர். சிறப்பாக சண்டையிட்ட காளைகளுக்கும்  சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

இப்போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். போட்டி தொடங்குவதற்கு முன் கிராமங்களில் உள்ள கால்நடைகளை விவசாயிகள் பாண்டு, வாத்திய இசை முழக்கத்துடன் ஊர்வலமாக அழைத்து சென்றனர். நாகரீகம் வளர்ந்தாலும் பழமை மாறவில்லை என்பதற்கு இது சாட்சியாக உள்ளது.

Related Stories:

>