×

கர்நாடகாவில் நாளை மறுநாள் கல்லூரிகள் திறப்பு

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் கல்லூரிகள் திறப்பதால், மாணவர்கள் கோவிட்-19 பரிசோதனை செய்து, அதன் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று உயர்கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் முதல் 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் திறக்காமல் உள்ளது. கொரோனா தொற்று முழுமையாக முடிவுக்கு வரும் வரையில் பள்ளிகள் திறக்ககூடாது என்று பெரும்பான்மையான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதன் காரணமாக பள்ளிகள் திறக்காமல் உள்ளது.

இந்நிலையில் பெற்றோர்கள் ஒப்புதலுடன் உயர்கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இளங்கலை, முதுகலை கல்லூரிகள், தொழில்கல்வி படிப்புகளான டிப்ளமோ, இன்ஜினியரிங் கல்லூரிகளை நவம்பர் மாதம் திறக்க வேண்டும் என்று பல்கலைகழக மானிய குழு (யூஜிசி) அனுமதி வழங்கியது. அதையேற்று நவம்பர் 17ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று துணைமுதல்வரும் உயர்கல்வி அமைச்சருமான அஷ்வத் நாராயண் கடந்த மாதம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் கல்வி பாதிக்காத வகையில் சமூக இடைவெளி பின்பற்றி கோவிட்-19 விதிமுறைகள் படி வகுப்புகள் நடத்தப்படும்.

முதல் கட்டமாக பட்டய படிப்புகளான எம்.ஏ., எம்.காம், எம்.எஸ்.சி. வகுப்புகள் தொடங்கப்படும். பின் பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி. வகுப்புகள் தொடங்குவதாக பல்கலைகழக துணைவேந்தர்கள் அறிவித்துள்ளனர். கல்லூரிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் 17ம் தேதி (நாளை மறுநாள்) கல்லூரிகள் திறக்கும் நிலையில், கல்லூரிக்கு வரும் மாணவர்கள், தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் கோவிட்-19 பரிசோதனை செய்து கொண்டு, அதன் நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளதற்கான சான்றிதழுடன் தான் கல்லூரிக்கு வர வேண்டும். ஒவ்வொரு மாணவரும் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் வாங்கி வர வேண்டும் என்று உயர்கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 8 மாதங்களாக கல்லூரி வாசலை மிதிக்காமல் இருக்கும் மாணவர்கள் நாளை மறுநாள் வருவதால் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனிடையில் கல்லூரிகள் திறக்காததால் 8 மாதங்களாக அரசு மாணவர் விடுதிகளும் மூடப்பட்டுள்ளது. நாளை முதல் விடுதிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விடுதிக்கு வரும் மாணவர்கள், கோவிட்-19 பரிசோதனை செய்து கொண்டதற்கான ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என்று சமூகநலத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Colleges ,Karnataka , Karnataka, Colleges Open, Corona pandemic
× RELATED இலவச கண் சிகிச்சை முகாம்