×

திமுகவில் கூட்டம் கூட்டமாக புதியவர்கள் இணைவதை பார்த்து பொறாமைப்படுகிறார் முதல்வர்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கூட்டம் கூட்டாக புதியவர்கள் திமுகவில் இணைவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறாமைப்படுவதாக, மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட  பல்வேறு அரசியல் இயக்கங்களில் இருந்து விலகி 1,134 பேர் நேற்று திமுகவில்  இணைந்தனர். காணொலி வழியாக நடந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் புதிதாக இணைந்தவர்களை வரவேற்றுப் பேசினார்.
அப்போது, அவர் ஆற்றிய உரை: திமுகவில் இணைந்துள்ள அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். திமுக என்ற கருப்பு சிவப்புக் கடலில் உங்களை நீங்கள் இணைத்துக் கொண்டுள்ளீர்கள்; சங்கமித்துள்ளீர்கள். இனி நீங்கள் தனித்தனி ஆள் அல்ல. ஒரு இயக்கமாக ஆகிவிட்டீர்கள். நாட்டில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் எந்த இயக்கத்தில் அதிகமாக இணைகிறார்களோ - நாட்டின் எதிர்காலமாக இருக்கும் இளைஞர்கள் எந்த இயக்கத்தில் அதிகமாக இணைகிறார்களோ - அந்த இயக்கம்தான் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற இயக்கம். அந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாட்டு மக்களின் முழுமையான ஆதரவைப் பெற்ற இயக்கமாக நம்முடைய இயக்கம் இருக்கிறது என்பதன் அடையாளம் தான் இருபது லட்சம் பேர் இணைந்திருப்பது.

இப்படிக் கூட்டம் கூட்டமாகக் திமுகவை நோக்கி புதியவர்கள் ஈர்க்கப்படுவதைப் பார்த்து முதலமைச்சர் பொறாமைப்படுகிறார். எந்தச் சூழலிலும் திமுக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறதே என்று வேதனைப்படுகிறார். இந்த கொரோனா காலத்திலும் மக்களுக்குச் சேவை செய்து நல்ல பெயர் வாங்கி விட்டார்களே என்று கோபப்படுகிறார். இந்த பொறாமையும், வேதனையும் கோபமும் அவருக்கு என்ன பேசுகிறோம் என்று தெரியாத அளவுக்கு அவரை ஆத்திரத்தில் உளற வைக்கிறது. என்னென்னவோ பேசுகிறார். ஒரு முதலமைச்சர் என்ன மாதிரி பேசக் கூடாதோ அந்த மாதிரி எல்லாம் பேசுகிறார்.

சசிகலாவின் காலைப் பிடித்து, காலை நோக்கி ஊர்ந்து போய் பதவியைப் பிடித்தார் பழனிசாமி. அப்போது தன்னை அப்பாவியாகக் காட்டிக் கொண்டார். அந்தப் பதவியை தக்க வைக்க பா.ஜ.க.வின் கொத்தடிமையாக மாறினார். இப்போது தனக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போலவும், தான் வைத்ததுதான் சட்டம் என்பது போலவும் நடந்து கொள்கிறார். தூத்துக்குடி சென்ற பழனிசாமி பயணம் செய்யும் பாதையில் கட்டாயப்படுத்தி கடையை மூட வைத்துள்ளார்கள். மக்கள் வந்து கருப்புக் கொடி காட்டிவிடக் கூடாது என்று பயந்தாரா என்னவோ தெரியவில்லை.

‘கோ பேக் இபிஎஸ்’ என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியதால் பயந்து போய் இப்படி கடையை மூடச் சொன்னாரா என்று சந்தேகமாக உள்ளது. மிக மிக முக்கியமான காலக்கட்டத்தில் நீங்கள் திமுகவில் வந்து சேர்ந்துள்ளீர்கள். தேர்தல் எனும் பெரும் கடமை உங்களுக்காகக் காத்திருக்கிறது. அதில் வெற்றி பெற வேண்டிய பொறுப்பு உங்கள் தோள்களில் இருக்கிறது. கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் காத்து வெற்றிக் கோட்டையைக் கைப்பற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Chief Minister ,newcomers ,crowd ,DMK ,speech ,MK Stalin , Chief Minister is jealous of the newcomers joining the DMK crowd: MK Stalin's speech
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...