×

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு பெண் போலீசார், டாக்டர்கள் உட்பட 105 பேர் சாட்சியாக சேர்ப்பு: சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்

மதுரை: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் பெண் காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 105 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளது சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தெரிய வந்துள்ளது. நெல்லை மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரது கொலை வழக்கு குறித்து சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் கொரோனா பாதித்து இறந்த எஸ்எஸ்ஐ பால்துரை தவிர, மற்ற 9 பேருக்கும் எதிராக சிபிஐ கூடுதல் எஸ்.பி. வி.கே.சுக்லா, குற்றப்பத்திரிக்கையை, கடந்த செப்.25ல் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

முன்னதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிக்கையில், கொலையான இருவருக்கும் ரத்தக்காயங்கள் ஏற்படுத்தப்பட்டது. சாத்தான்குளம் காவல் நிலைய சுவரில் இருந்த ரத்த மாதிரிகளை டிஎன்ஏ பரிசோதனை செய்ததில், ரத்தக்கறையுடன் இருந்த ஆடையுடன் பொருந்தியிருந்தது. ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தபோது அவர்கள் துன்புறுத்தப்பட்ட இடம் மற்றும் போலீஸ் சுவரில் இருந்த ரத்தக்கறைகள் உள்ளிட்டவை, ஜெயராஜ் மற்றும் பென்னிக்சிற்கு உடையது என்பது உறுதியானது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணையில், கேமரா, செல்போன் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும் 2 பேரும் போலீசாரால் ரத்தம் சொட்டச் சொட்ட தாக்கப்பட்டு காயம் ஏற்படுத்தப்பட்டது உறுதியானது.

ஆனால், போலீசாரால் தாக்கப்பட்ட இருவரையும் பரிசோதிக்காமல் மருத்துவர் தகுதி சான்று வழங்கியுள்ளார் என்பது தெரிய வந்தது. தற்போது கூடுதல் தகவலாக, இந்த குற்றப்பத்திரிக்கையில் பெண் காவலர்கள் உள்ளிட்ட 6 போலீசார், சிறை ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சில வியாபாரிகள், உறவினர்கள் மற்றும் கொலையானவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட 105 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 11ம் தேதி மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை துவங்கியது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை டிச.10க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : witnesses ,policemen ,CBI ,doctors , Satankulam double murder case: 105 women, including doctors, added as witnesses: CBI chargesheet
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்