ஈரோடு ரயில் நிலையம் உள்பட 10 இடங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ரயில் நிலையம் உள்பட 10 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாடு அறைக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ரயில்வே தலைமை அலுவலக காவல் கட்டுப்பாடு அறைக்கு நேற்று முன்தினம் இரவு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் தன்னுடைய பெயர் அப்துல்கரீம் என்று கூறினார். மேலும் அவர், ‘‘ஈரோடு ரயில் நிலையம் அருகில்  உள்ள பெட்ரோல் பங்க், பேருந்து நிலையம், மணிக்கூண்டு, ரயில் நிலையம் உள்பட மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக என்னுடன் சேர்த்து 10 பேர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  சுற்றிக்கொண்டு உள்ளனர்’’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து சென்னை கட்டுப்பாடு அறையில் இருந்து  உடனடியாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு முழுவதும் நேற்று முன்தினம் இரவு போலீசார் உஷார்படுத்தப்பட்டு சோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மிரட்டல் வந்த செல்போன் நம்பரின் டவர் சிக்னலை ஆய்வு செய்தபோது, ஈரோடு பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சங்கர்நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் (32) என்பதும், அவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* ‘சிறையில மூணு வேளை சோறு கிடைக்கும்ல’

சந்தோஷ்குமார், ஏற்கனவே 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டவர் ஆவார். அப்போது, இரண்டு மனைவியும் என்னை விட்டு பிரிஞ்சிட்டாங்க. சாப்பாட்டுக்கே வழியில்லை. சிறையில மூணு வேளை சோறு கிடைக்கும்ல. அதனால, குண்டு மிரட்டல் விடுத்தேன் என்று கூறி போலீசையே மிரளச் செய்தவர். இப்போது, மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிக்கியுள்ள அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>