×

மழைநீர் சேகரிப்பு திட்டத்தால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு

சென்னை: மழைநீர் சேகரிப்பு திட்டத்தால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தும் பணியை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் இணைந்து தொடங்கியது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் உள்ள வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதிகளை ஆய்வு செய்ய வார்டு வாரியாக 200 குழுக்கள் அமைக்கப்பட்டன.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை இந்த குழுக்கள் 3,26,558 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதில் 2,57,897 கட்டிடங்களில் ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு நல்ல நிலையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 19,424 கட்டிடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளட வேண்டும். மேலும், 43,543 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதை தவிர்த்து 26,097 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மழைநீர் சேகரிப்பு ஆய்வின்போது சென்னை மாநகராட்சி சார்பில் 120 சமுதாய கிணறுகளும், குடிநீர் வாரியம் சார்பில் 190 சமுதாய கிணறுகளும் கண்டறியப்பட்டுளளன. இவற்றை சீரமைக்கும் பணியில் இரு அமைப்புகளும் ஈடுபட்டு வருகிறது.
இதன் காரணமாக, சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன்படி அண்ணா நகரில் 0.92 அடி, திரு.வி.க.நகரில 0.74 அடி, மாதவரத்தில் 0.66 அடி, மணிலியில் 0.44 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Tags : Chennai , Groundwater level rises in Chennai due to rainwater harvesting project
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...