×

‘சர்க்கரை’ மீது அக்கறை வைங்க...! இன்று(நவ.14) உலக நீரிழிவு நோய் தினம்

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். ஆனால், மாறி வரும் வாழ்வியல் சூழலில், உணவு பழக்கங்களால் நாம், பலவிதமான நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருகிறோம். எங்கோ சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, உலகமெங்கும் பரவி மக்களை பாடாய்படுத்தியதை பார்க்கிறோம். கடந்த 20, 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை, 60 வயதை கடந்தவர்களே நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகினர். தற்போது 30, 40 வயதை நெருங்குபவர்களுக்கு கூட நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஏன் குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 14ம் தேதி ‘உலக நீரிழிவு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி, உலகளவில் 45 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2.50 கோடி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர் என்கிறது ஆய்வு. உடம்பிலிருந்து வரும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இயற்கையாக கணையம் இன்சுலினை சுரக்கும். இந்த இன்சுலினின் சுரப்பில் ஏற்படும் குறைபாடே சர்க்கரை நோய் எனப்படுகிறது.

* அறிந்து கொள்வது எப்படி?
நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? களைப்பாக உணர்கிறீர்களா? பிறப்புறுப்பில் புண், உடலுறவில் ஆர்வமின்மை, எடை குறைதல், பாத எரிச்சல், பார்வை குறைபாட்டை உணர்கிறீர்களா? இவை எல்லாமே நீரிழிவு நோயின் அறிகுறிகள். இதுபோன்று உங்களுக்கு இருந்தால், உடனே டாக்டரை பார்த்து அவரது ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். டாக்டர்கள் மருந்து, மாத்திரைகளை பரிந்துரைத்தால் கட்டாயம் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் சர்க்கரை அளவு கூடி சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை சேதப்படுத்தி விடும். பார்வை மங்கும். சிலருக்கு மாரடைப்பும் ஏற்படலாம். எனவே, கவனமாக இருக்க வேண்டும்.

* இந்தியா முதலிடம்
உலக அளவில் இந்தியாதான் நீரிழிவு நோயில் முதல் இடத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் சுமார் 8 கோடி பேர் வரை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 20 ஆண்டுகளில் இது 2 மடங்காக அதிகரிக்கும் என அதிர்ச்சியான ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. சர்க்கரை ஒரு மரபு நோயாகவும் கருதப்படுகிறது. அப்பா, அம்மாவுக்கு சர்க்கரை நோய் இருந்தால், பிள்ளைகளுக்கு 80 - 90 சதவீதம் வரை வர வாய்ப்புகள் உள்ளன. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட 2017ம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி, 8.8 சதவீத இளம் வயதினருக்கு இன்சுலின் குறைபாடு உள்ளது. சர்க்கரை நோய் குறைபாட்டால் பெண்களைவிட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை ஐதராபாத், கோல்கட்டாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் சென்னை மற்றும் மும்பையில் 11 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்திய ஆய்வுப்படி 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், 10 - 20 வயதிற்குட்பட்டவர்களையும் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. எனவே, இந்நோய் குறித்து கட்டாயம் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பெரும்பாலும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கிழங்கு வகைகள், இனிப்புகளை உண்ணக்கூடாது.

நீர்ச்சத்துள்ள காய்கறிகளான பீர்க்கங்காய், சுரைக்காய், பூசணிக்காய், நார்ச்சத்துள்ள கீரை வகைகளை கட்டாயம் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக இனிப்புள்ள பழங்களை தவிர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், பழைய உணவுகளை உண்ணக்கூடாது. தேவைக்கு அதிகமாகவும் உண்ணக்கூடாது. நோய் என்று இதை நாம் குறிப்பிட்டாலும், இது இன்சுலின் சுரப்பு குறைபாடு மட்டுமே. மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றினாலும் எந்த பிரச்னையுமின்றி இருக்கலாம். நீண்ட காலம் நீடூழி வாழலாம்.

* சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு வகைகள்
இன்றைய அவசர உலகில் சர்க்கரை நோய் பாதிப்பு மிகவும் பரவலாக காணப்படுகிறது. இதனால் வாழ்க்கை முறையே மாறிவிடுகிறது. சரியான உணவு முறை மூலம் இதனை கட்டுப்படுத்தலாம். நீரிழிவு என்பது உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ஆகும். இன்சுலின் ஹார்மோன்களால் ஏற்படும் மாற்றங்களினால், உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் அசாதாரண நிலையை அடையும்போது, ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும். மரபணு காரணங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் நீரிழிவு நோய் வர காரணமாக உள்ளது.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் பருமன் அதிகமாகும் ஆபத்தினாலும், மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய நோயினாலும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு. தாமதமான சிகிச்சை, நீரிழிவு குறித்த குறைந்த விழிப்புணர்வு ஆகியவையால், உடல் மேலும் மோசமடையும். உணவு பழக்க வழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்காற்றுகிறது. குறிப்பாக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் உணவு உண்ணாது இருக்கக்கூடாது. ஏனெனில், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. சிறந்த ஆரோக்கியமான காலை உணவு, அனைவருக்கும் மிக முக்கியமானது.

தினசரி, காலை உணவு ஒரு மனிதனுக்கு மிக முக்கியமானதாக உள்ளது. ஏனெனில், காலை உணவின் அளவை மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்தே, அந்த நாள் முழுவதிற்கான ஆற்றல் கிடைக்கிறது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நீரிழிவு நோயினால் பாதிப்படைந்தவர்கள், காலை உணவை மிக கவனமாகவும் ஆரோக்கியமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் காலை உணவில் புரதச்சத்து நிறைந்த காய்கறி உணவுகளையும், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, இரண்டு கப் அளவு உப்புமா அல்லது அவல் எடுத்துக்கொள்வதற்கு பதிலாக, அரை கப் அளவு உப்புமா அல்லது அவல், மற்றும் அரை கப் அளவு பயிர்களுடன் சிறிது தயிர் சேர்த்து கொள்ளலாம்.

இரண்டு ரொட்டி சாப்பிடுவதற்கு பதிலாக, ஒரு ரொட்டியுடன் ஒரு முட்டை மற்றும் பச்சை காய்கறிகள் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். பாசிப்பருப்பு வகைகள் அதிக புரதச்சத்து உடையது. பாசிப்பருப்பு கலந்த உணவுகள் செரிமானம் ஆவதற்கு நேரம் எடுக்கும். எனவே, காலை உணவிற்கு பாசிப்பருப்பு எடுத்துக்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். முட்டையில், புரதச்சத்து அதிகம் நிறைந்து இருக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது உணவில் முட்டை எடுத்துக்கொள்வது நல்லது. வேகவைத்து, அல்லது முட்டை பொரியல் செய்து காலை உணவின்போது எடுத்துக்கொண்டால், ஆரோக்கியமாக இருக்கும். சிவப்பு அவலுடன் சேர்த்து காய்கறிகள் கொண்டு சமைக்கப்படும் உணவு, சாப்பிடுவதற்கு எளிதாக இருப்பது மட்டுமின்றி, அதிக நார் சத்து நிறைந்ததாகவும் காணப்படுகிறது.

நார் சத்து அதிகம் இருக்கக்கூடிய உணவுகள், பசி தாங்குவது மட்டுமின்றி, எளிதில் இனிப்பு அல்லது பிற உணவு வகைகளை தேடி போவதை சிறிது நேரத்திற்கு கட்டுப்படுத்தும். வெந்தயம் சேர்த்து சப்பாத்தி செய்தால், அதில் நார் சத்து அதிகம் இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமான காலை உணவாக அமைகிறது. சமையல் எண்ணெய் உபயோகித்து சப்பாத்தி செய்யவேண்டும், சந்தையில் இருக்கும் ஆரோக்கியமற்ற சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை தவிர்க்கவும். பயிர் வகைகளில் அதிகளவு புரதச்சத்து மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது. இவை ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும். வெள்ளரிக்காய், தக்காளி, சிறிதளவு உப்பு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு, பயிர்கள் ஆகியவற்றை கலந்து உண்டால், இதை விடவும் ஆரோக்கியமான உணவு வேறு எதுவும் இருக்க முடியாது.

Tags : World Diabetes Day , Concerned neo-hippies and their global warming, i'll tell ya. Today (Nov.14) is World Diabetes Day
× RELATED கும்பகோணத்தில் உலக நீரிழிவுநோய் தின விழிப்புணர்வு பேரணி