தங்கம் கடத்தல் வெளியானதும் துபாய்க்கு தப்பிச் சென்ற அமீரக தூதரக நிர்வாக தலைவரை கைது செய்ய விரைகிறது என்ஐஏ: வெளியுறவுத் துறை அந்தஸ்து ரத்து

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்  தங்க கடத்தல் விவகாரம் வெளி வந்தவுடன் துபாய்க்கு தப்பி சென்ற அமீரக தூதரக நிர்வாக தலைவருக்கான வெளியுறவுத்துறை அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்  உள்ள  ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் துணை தூதராக இருப்பவர் ஜமால் உசேன் அல்சாபி. கொரோனா பரவலை தொடர்ந்து, இந்த ஆண்டு தொடக்கத்திலயே துபாய் சென்று விட்டார். இதையடுத்து அவருக்கு அடுத்த அந்தஸ்த்தில் இருந்த அட்டாஷே என்று அழைக்கப்படும் நிர்வாக பிரிவு தலைவரான ராஷித் கமீஸ் அலி அந்த பொறுப்பை கவனித்து வந்தார்.

இவருக்கும், துணைத்தூதருக்கு இணையான வெளியுறவுத்துறை அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் 30ம் தேதி தங்கம் அடங்கிய பார்சல் திருவனந்தபுரம் வந்தது. அதில் தங்கம் இருப்பதாக சுங்க இலாகாவுக்கு ரகசிய தகவல் வந்ததை தொடர்ந்து அதிகாரிகள் பார்சலை பிடித்து வைத்திருந்தனர். இதையடுத்து ராஷித் கமீஸ் அலி விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று பார்சலை உடனடியாக விடுவிக்குமாறு கூறி, சுங்க இலாகா அதிகாரிகளை மிரட்டி உள்ளார். ஆனால் அதிகாரிகள் பார்சலை விடுவிக்கவில்லை. ஜூலை 5ம் தேதிதான் பார்சலில் தங்கம் இருக்கும் தகவல் வெளியானது.

இதையடுத்து, 11ம் தேதி ராஷித் கமீஸ் அலி, துபாய்  தப்பிச் சென்றார். இந்த வழக்கில் கைதான சொப்னா, சரித்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது, தங்கம் கடத்தலில் அட்டாஷே ராஷித் கமீஸ் அலிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் துபாய் சென்று விட்டதாலும், வெளியுறவுத்துறை அந்தஸ்து இருப்பதாலும் அவரிடம் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த வழக்கில் என்ஐஏ விசாரணைக்காக துபாய் சென்றிருந்தது. ஆனால் அட்டாஷேயிடம் விசாரணை நடத்த முடியாமல் அதிகாரிகள் திரும்பினர்.

இந்த நிலையில் அட்டாஷே ராஷித் கமீஸ் அலியின் வெளியுறவுத்துறை அந்தஸ்தை துபாய் அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதையடுத்து அட்டாஷேயிடம் இனி விசாரணை நடத்த தடையில்லை. எனவே என்ஐஏ விரைவில் துபாய் சென்று அவரிடம் விசாரணை நடத்தும் என தெரிகிறது. இதற்கிடையே தூதரகத்தில் நிதித்துறை தலைவராக இருந்த எகிப்து நாட்டை சேர்ந்த காலித்துக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்து இந்தியா கொண்டு வர வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

* மூடப்பட்ட கவரில் முக்கிய விபரங்கள்

சிவசங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தொடர்பாக நேற்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தது. அப்போது மத்திய அமலாக்கத்துறை அதிரடி குற்றச்சாட்டுகளை தெரிவித்தது. கேரள அரசின் முக்கிய திட்டங்கள் குறித்த விபரங்கள் அனைத்தையும் சிவசங்கர், சொப்னாவுக்கு வழங்கி உள்ளார். அதன்மூலம் இருவரும் சேர்ந்து கோடிக்கணக்கில் கமிஷன் பெற்றுள்ளனர். தூதரக பார்சலில் தங்கம் கடத்துவதற்கு முன்பே சொப்னாவும், சிவசங்கரும் சேர்ந்து பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். விசாரணையின் முதல்கட்டத்தில் சிவசங்கரை காப்பாற்ற சொப்னா பொய்யான விபரங்களை அளித்தார். சிவசங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை தற்போதைக்கு வெளியிட இயலாது. எனவே சீல்வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

>