×

கொரோனா பிரச்னையால் நிறுத்தப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் மீண்டும் ஆரம்பம்: இன்று முதல் பிளே ஆப் சுற்று

கராச்சி: கொரோனா பீதி காரணமாக இடைநிறுத்தப்பட்டட பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) டி20 கிரிகெட் போட்டி, இன்று முதல் மீண்டும் நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி போல் பாகிஸ்தானிலும் பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடக்கிறது. மொத்தம் 6 அணிகள். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகள் விளையாட வேண்டும். பிஎஸ்எல் போட்டியின் 5வது சீசன் கடந்த பிப். 20ம் தேதி தொடங்கியது.
இடையில் கொரோனா பீதியால் மார்ச் 13ம் தேதி முதல்  ரசிகர்கள் இல்லாமல் மூடிய அரங்குகளில் போட்டிகள் நடைபெற்றன.

கொரோனா பரவல் அதிகரித்ததால் வெளிநாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க மறுத்தனர். கூடுதலாக இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்சுக்கு கொரோனா தொற்று அறிகுறி தெரிந்ததால் பிஎஸ்எல் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது லீக் சுற்று போட்டிகள் முடிவுக்கு வந்திருந்தன. மேலும் மார்ச் 17ம் தேதி நடைபெற இருந்த பிளே ஆப் போட்டிகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), எஞ்சிய போட்டிகள் நடத்த முடியாவிட்டால் லீக் சுற்றின் அடிப்படையில் அதிக வெற்றிகளை பெற்ற அணி சாம்பியனாக அறிவிக்கப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, நவம்பர் மாதம் பிஎஸ்எல் பிளே ஆப், இறுதிப் போட்டிகள் நடத்தப்படும் என்று பிசிபி கூறியது. அதனை செப்டம்பரில் உறுதி செய்து, எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணையும் அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் போன்று பிளேஆப் பாணியில் நடக்கும் நாக் அவுட் போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடித்த கராச்சி கிங்ஸ், முல்தான் சுல்தான்ஸ், லாகூர் குவாலேண்டர்ஸ், பெஷாவர் ஜல்மி  ஆகிய அணிகள் விளையாட உள்ளன. இன்று மாலை ‘குவாலிபயர்’  ஆட்டமும், இரவு ‘எலிமினேட்டர்-1’ ஆட்டமும் நடக்கின்றன. தொடர்ந்து நாளை இரவு ‘எலிமினேட்டர்-2’ ஆட்டம் நடக்கிறது. இறுதிப்போட்டி நவ.17ம் தேதி நடக்கிறது. இந்த போட்டிகள் அனைத்தும் கராச்சியில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் நடக்கும்.

* முதல் முறையாக முழுவதும் பாகிஸ்தானில்...
பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் போட்டிகள் 2016ம் ஆண்டு தொடங்கியது. பாகிஸ்தானில் விளையாட வெளிநாட்டு வீரர்கள் தயங்கியதால் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபியில் நடந்தன. தொடர்ந்து 2017ம் ஆண்டு லீக், பிளே ஆப் போட்டிகள் யுஏஇயிலும், இறுதிப்போட்டி மட்டும் பாகிஸ்தானிலும் நடந்தது. மேலும் 2018ம் ஆண்டு லீக் போட்டிகள் யுஏஇயிலும், பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டி பாகிஸ்தானிலும் நடைபெற்றன.மேலும் 2019ம் ஆண்டு பெரும்பான்மையான லீக் போட்டிகள் யுஏஇயிலும், 4லீக் போட்டிகள், பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றன. இந்நிலையில் ‘2020ம் ஆண்டு பிஎஸ்எல் போட்டி பாகிஸ்தானில் தான் நடைபெறும்’ என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்நாட்டு பிரதமருமான இம்ரான்கான் உறுதியுடன் தெரிவித்திருந்தார். அதன்படி பிபிஎல் தொடரின் எல்லா போட்டிகளும் முதல்முறையாக இந்த ஆண்டு பாகிஸ்தானில் மட்டுமே நடக்கின்றன.

Tags : playoffs ,Pakistan Super League , Pakistan Super League, which was halted due to the Corona issue, resumes: from today Play-off round
× RELATED பிஎஸ்எல் டி20 கிரிக்கெட்; இஸ்லாமாபாத்...