×

விராத் இல்லாததில் மகிழ்ச்சி இல்லை... ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தகவல்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள இந்திய அணியில், கேப்டன் விராத் கோஹ்லி ஒரு போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்ற தகவல் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி சுமார் 22 மாதங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதுமட்டுமல்ல கொரோனா பீதிக்கு பிறகு முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. ஐபிஎல் நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து  நேரடியாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி அங்கு 3 ஒருநாள், 3 டி20, 4 டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.

இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி ஒரு நாள், டி20 போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட்டில் மட்டும் விளையாட உள்ளார். அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுக்கு பிரசவ நேரம் என்பதால் கடைசி 3 டெஸ்ட்  போட்டிகளில் இருந்து கோஹ்லிக்கு ஒய்வளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2018-19ம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் விராத் தலைமையிலான இந்திய அணி வென்றது. அந்த தொடரில் அவர் எடுத்த  292 ரன்தான் 2வது அதிகபட்ச ரன்னாகும். அதேபோல் அதற்கு முன்பு 2014-15 ஆஸி. பயணத்தில் விராத் எடுத்த 692 ரன்தான் அந்த டெஸ்ட் தொடரின் அதிகபட்ச ரன் குவிப்பாக இருந்தது.

இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் இருந்து கோஹ்லி விலகுவது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகம் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கருத்தோ வேறாக இருக்கிறது. அவர், ‘கோஹ்லி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடாதது எனக்கு மகிழ்ச்சி இல்லை. நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். என் வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த வீரர்களில் அவர்தான் சிறந்த வீரர். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆற்றலுடன் அவர் விளையாடும் விதம் மட்டுமல்ல, விளையாட்டு மீதுள்ள ஆர்வம், களத்தில் அவரின் வேகம் என காரணங்களை பட்டியலிடலாம். அப்படி அவர் ஆட்டத்தில் வெளிப்படுத்தும் திறன் நம்ப முடியாதவை.

அதனால் அவர் விளையாடாதது எங்களுக்கு மகிழ்ச்சியானதல்ல. அது வீரர் டஸ்டின் மார்டின் இல்லாத ரிச்மண்ட் கிளப் (இது 135 ஆண்டுகள் பழமையான ஆஸ்திரேலியா கால்பந்து கிளப்) அணி குறித்து பேசுவது போல் இருக்கும்’ என்று கூறியுள்ளார். விராத் விலகியு ள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கு துணைக் கேப்டனாக இருக்கும், அஜிங்க்யா ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் 2018-19ம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது ஆஸி. அணியில்  டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் ஷர்மா மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்ந்துள்ளது கூடுதல் பலமாகவே இருக்கும்.

* வெற்றி எளிதல்ல...
ஆஸி பந்து வீச்சாரர் நாதன் லயன், ‘விராத் கோஹ்லி  உலகின் மிகச்சிறந்த வீரர். அவர் இல்லாவிட்டாலும் நாங்கள் தாக்குதல் வேகத்தை குறைக்க மாட்டோம். ரஹானே, புஜாரா இருவரும் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள். எனவே விராத் இல்லாததால் நாங்கள் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வெல்வோம் என்று அர்த்தம் கிடையாது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்டை எதிர்கொள்ள எங்களுக்கு நிறைய வீட்டுப்பாடங்கள் இருக்கின்றன. இன்னும் நிறைய வேலைகள் உள்ளன’ என்று கூறியுள்ளார்.

* வெற்றி எளிது....
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் சமூக ஊடகமொன்றில், ‘கடைசி 3 டெஸ்ட்களில் விராத் இருக்க மாட்டார். முதல் குழந்தை பிறப்புக்காக சரியான முடிவை எடுத்திருக்கிறார். ஆனால், இந்திய அணியில் அவர் இல்லாத நிலையில்  ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை எளிதில் வெல்லும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Virat ,coach ,Australia , Not happy with Virat's absence ... Australia coach Justin Langer Info
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...