×

இனிமையான தீபாவளி கொண்டாடி மகிழுங்கள்...!! இயற்கை தரும் பாடம்

தீபாவளி பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் அதிகாலையில் குளித்து புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்தும், பலகாரங்கள் உண்டும் குதூகலமாக தீபாவளியை கொண்டாட இருக்கிறோம். கொரோனா காலத்தில் மாசில்லா தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டும். அந்த வகையில் இயற்கை தரும் பாடங்கள் இங்கே...

* எதிர்பார்ப்பு இல்லாமல் உதவுங்கள்:

ஒரு மரத்தின் கருணையை யோசித்து பாருங்கள். கொளுத்தும் சூரியனின் அனலில் இருந்து நம்மை பாதுகாக்க நிழல் தருகிறது. குளிர்ந்த காற்றையும் தருகிறது. காற்றில் இருக்கும் கார்பன்டை ஆக்ஸைடை சுத்தமாகி, நமக்கு சுவாசிக்க ஆக்ஸிஜனும் தருகிறது. நம்மை அழகுபடுத்தி கொள்ள மலர்களும் தருகிறது. நம் பசிதீர்க்க காய்களும், பழங்களும் தருகிறது. ஆழ வேரூன்றி, மண் அரிப்பை தடுக்கிறது. அதோடு, நிலத்தடி நீரையும் பாதுகாக்கிறது. பல மரங்களின் இலைகள் உரமாக உதவுகின்றன. சில மரங்களின் இலைகளும், கிளைகளும் மருந்தாக பயன்படுகின்றன. இவ்வளவும் தருகின்ற மரங்கள், பதிலுக்கு நம்மிடம் எதையாவது எதிர்பார்க்கின்றனவா?

* எப்போதும் உழைக்க தயங்காதீர்கள்:

சுறு,சுறுப்பாகவும் கடினமாகவும் உழைக்கும் எறும்புகள், தங்கள் கூட்ட ஒழுங்கை ஒருபோதும் கைவிடுவதில்லை. மற்றவர்களோடு இணைந்து உழைக்கவும், அடுத்தவர்களுக்காக நேரம் செலவிடவும் தவறுவதில்லை. நம் வாழ்வில், இந்த விஷயங்களில் எறும்பாக இருப்போம்.

* எந்த சூழலிலும் பயணத்தை நிறுத்தாதீர்கள்:

நதிகள், தங்களின் முயற்சியிலேயே தண்ணீரை சுத்தமாக்கி தருகின்றன. நமக்கு குடிநீர் தருவதோடு, எல்லா உயிரினங்களின் தாகம் தீர்ப்பவையும் நதிகள்தான். வழியெங்கும் நிலங்களை வளமாக்கி, பயிர்களையும் விளையச்செய்கின்றன. எங்கேயும் அவை ஒரு நொடிகூட ஓய்வெடுப்பதில்லை. அவற்றின் பயண இலக்கு, கடலை சேர்வதுதான். அதற்கான முயற்சியை அவை நிறுத்துவதில்லை.

* மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளுங்கள்:

நம் துயரங்களை மற்றவர்களிடம் பகிர்ந்தால், மனம் லேசாகி, அவை குறையும். நம் சந்தோஷங்களை மற்றவர்களிடம் பகிர்ந்தால், அவை பெருகி இரண்டு மடங்காகும். இது காகங்கள் கற்றுக்கொடுக்கும் இயற்கை பாடம். ஒரு சிறு துண்டு உணவு கிடைத்தாலும், சுயநலத்தோடு அவை சாப்பிடுவதில்லை. உடனே குரல்எழுப்பி மற்ற காகங்களை கூப்பிடுகின்றன. தாங்கள் பசியாறிய பிறகு, குஞ்சுகளுக்கு தங்கள் அலகில் உணவு கொண்டு போகின்றன. பேராசையோ, பொறாமையோ இல்லாத இந்த சந்தோஷ பகிர்வுதான் அவற்றின் வாழ்வை மகிழ்ச்சியாக மாற்றுகிறது.

* தினம் தினம் உற்சாகமாக வாழுங்கள்:

நமக்கு ஒரு நாள் என்பது 24 மணிநேரம், சில பூச்சிகளுக்கு அதுதான் ஆயுள்காலமே. உருவெடுத்த சில மணி நேரங்களில் மரணம் நிச்சயம் என்றாலும், அவற்றின் வாழ்வில் எதற்கும் குறைவில்லை. நாளைய கவலைகளில், இன்றைய வாழ்வை தொலைக்கும் பலரும், இந்த பூச்சிகளிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

* யாரையும் சார்ந்து இருக்காதீர்கள்:

பறவைகள், எந்த கருவிகள் உதவியும் இல்லாமல், தங்கள் உள்ளுணர்வை மட்டுமே நம்பி, கண்டம் விட்டு கண்டம் சென்று திரும்புகின்றன சில பறவைகள். தொலை தூரத்தில் இருந்து சிறு,சிறு குச்சிகளையும், நார்களையும் எடுத்துவந்து, தாங்களாகவே கூடு கட்டிக்கொள்கின்றன. குஞ்சுகளை யார் உதவியும் இல்லாமல் வளர்த்து ஆளாக்குகின்றன. தன்னம்பிக்கையுடன் கண்ணியத்துடன் அவை வானில் உயர பறக்கின்றன.

* பொறுமை பெருமை தரும்:

மரங்களும், இலைகளும் புதைந்து, கார்பன் படிமங்கள் ஆகி, பல்லாயிரம் ஆண்டு கால அழுத்தத்தை தாங்கி, இருக்க முடிந்ததால் - அதுதான் வைரம். காத்திருக்கும் பொறுமையும், அழுத்தங்களை தாங்கும் உறுதியும் மட்டுமே வேண்டும். வாழ்வில் எதையும் தாங்கி, காத்திருக்க தெரிந்தால், நீங்களும் உன்னதமாக ஜொலிக்கும் வைரம் ஆகலாம்.

* உணர்வுகளை வெளிப்படுத்தாதீர்கள்:

சிறிய படகாக இருந்தாலும், பிரம்மாண்ட கப்பலாக இருந்தாலும், தன்னை கடந்துசெல்ல கடல் உதவுகிறது. புயல், சூறாவளி என அசாதாரண சூழல்களில் மட்டும் தன் இயல்பை மறந்து, ஆக்ரோஷம் கொள்கிறது. ஆழ்ந்த அறிவுபெற்று, கடலைப்போல அமைதியாக இருக்கவேண்டும். உங்கள் மனதில் இருக்கும் உணர்வுகளை முகத்திலும், செயல்களிலும் வெளிப்படுத்தாதீர்கள்.

* நீங்கள் நீங்களா இருங்கள்:

எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும், உங்கள் இயல்பை மாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் திறமை, வலிமை எதுவுமே சூழலால் மாறுவதில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

* இயல்பு தவறாதீர்கள்:

அதிகாலையில் சூரியன் உதிக்காத ஒரு நாளை கற்பனை செய்து பார்க்க முடியுமா? அப்படி ஒரு நாள் அமைந்தால், அதை நாள் என்று அழைப்பதற்கு நாம்தான் இருப்போமா? தினமும் இதே நேரத்துக்கு போக வேண்டி இருக்கிறதே என சோம்பல் அடைந்து காலையில் 8 மணிக்கு சூரியன் வந்தால் என்ன ஆகும்? ஒருவேளை அது வராமலே போனால், உலகமே அழிந்து போகும்! நேரம் தவறாமல் வர வேண்டும், நம் கடமையை முழுமையாக நாம் செய்ய வேண்டும். எப்போதும் இயல்பு தவறாதீர்கள். வாழ்வில் வெற்றி நிச்சயம்.

Tags : Celebrate sweet Diwali ... !! The lesson of nature
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...