×

‘அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை’.. நிதிஷ்குமார் பேட்டி

பாட்னா: அரசியலில் இருந்து நான் ஓய்வு பெறப்போவதில்லை. அந்த எண்ணம் தற்போது எனக்கு இல்லை. பிரசாரத்தின் போது எனது கடைசி தேர்தல் என்று நான் பேசியது, ஓய்வு பெறுகிறேன் என்ற எண்ணத்தில் அல்ல’  என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகாரில் நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தள கட்சி மற்றும் பாஜ கூட்டணி பெரும்பான்மை இடங்களை பிடித்துள்ளது. ஆனால் இந்த கூட்டணியில் பாஜ 74 தொகுதிகளிலும், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இது நிதிஷ்குமாருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ‘நிதிஷ்குமார்தான் முதல்வர்’ என்று பாஜ தலைவர்கள் அனைவரும் உறுதியளித்து விட்ட நிலையிலும், தனிப்பட்ட முறையில் இந்த தேர்தல் அவருக்கு தோல்விதான் என்ற விமர்சனம் அனைவராலும் முன்வைக்கப்படுகிறது. இதனால் உற்சாகமிழந்த நிலையில்தான நிதிஷ்குமார் உள்ளார். பூர்ணியா தொகுதியில் தனது கடைசி நாள் பிரசாரத்தில் இது எனக்கு கடைசி தேர்தல் என்ற பொருள் வரும் வகையில் நிதிஷ்குமார் பேசியிருந்தார். 43 இடங்களில் மட்டுமே அவரது கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரது அந்த பேச்சை எடுத்து, உள்ளூர் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இது குறித்து நிதிஷ்குமார் கூறுகையில், ‘‘ஓய்வு குறித்து நான் பேசவில்லை. எப்போதுமே எனது கடைசிநாள் பிரசாரத்தில் நான் பயன்படுத்தும் வார்த்தைகளைத்தான் அன்றும் கூறினேன். ‘எல்லாம் நன்றாக இருந்தால், முடிவும் நன்றாகவே இருக்கும்‘ என்று கூறினேன். அந்த வாக்கியத்துக்கு முன்னால் நான் பேசியதையும், அதற்கு அடுத்து பேசியதையும் முழுவதுமாக கேட்டால் நான் என்ன கூறினேன் என்பது தெளிவாக புரியும்’’ என்று தெரிவித்துள்ளார்.
அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ள போதிலும் பாஜ தேசியத் தலைவர்கள் அனைவரும் பீகாரின் முதல்வர் நிதிஷ்குமார்தான் என உறுதியாக தெரிவித்து விட்டனர். ஆனால், ‘முதல்வர் பதவி எனக்கு வேண்டும் என்று நான் கேட்கவில்லை. என்டிஏ கூட்டணி எம்எல்ஏக்கள் அனைவரும் கூடி, இனிமேல்தான் முதல்வரை தேர்வு செய்வார்கள்’ என்று நிதிஷ்குமார் நேற்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொருபுறம் இந்த தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை கைப்பற்றியுள்ள ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிரசாரமும் முடிந்து, தேர்தலும் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையிலும் தொடர்ந்து நிதிஷ்குமாரை விமர்சனம் செய்து வருகிறார். ‘மக்களின் முதல்வர் நானே. நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்க போகிறார். ஆனால் அதற்குரிய மகிழ்ச்சி அவரது முகத்தில் இல்லை என்பதை அனைவரும் அறிந்திருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

Tags : interview ,Nitish Kumar , ‘I have no intention of retiring from politics’ .. Interview with Nitish Kumar
× RELATED இதுபோல் ஆட்டத்தை தொடர விரும்புகிறேன்: ஆட்டநாயகன் நிதிஷ்குமார் பேட்டி